Thursday, August 26, 2010

மேஜர் கமல் (கவிதை)

0 comments


சாலவும் மலர்ந்தவுன் தாமரை முகந்தான்
சாற்றிடும் பெயருக்குப் பொருத்த மானதே!
சீலனாய்த் திகழ்ந்து சிறுபையன் முதலாய்ச்
சிந்தை கவர்ந்தவெம் சிங்கார வீரனே!
வேலவன்சால் அழகோனே! விழிகள் குளமாகிறதே
வண்டலூர்க் கொடையே! வல்வை மகனே!

கரும்புலி மில்லரொடு காவியமாய் ஆனவனே!
கமலென்னும் பெயரிற் களம்பல கண்டவனே!
அருமகன் நீயன்றோ? ‘அச்சன்’என ஆசையாய்
அழைத்துனை வளர்த்தனரே ஆன்றுசால் ஈன்றோர்
விரும்பியே படைபுகுந்தாய் வீரமிகு வரலாற்று
வெற்றிநகர் வல்வையில் விளைந்தநல் முத்தன்றோ?
கரும்பென இனித்தாய் காணும் பொழுதுகளில்;;,
கட்டழகு வட்டமுகம் கண்ணுக்குள் நிற்கிறதே!

ஐயாநின் எழிலுருவம் அடங்கிய சுவரொட்டி
அன்றெம் ஊர்களில் ஆங்காங்கு தோன்றிடவே
பையவே சென்றுநான் பதைக்கும் நெஞ்சத்திற்
பரிவுடன் தொட்டு விழிகளில் ஒற்றினேன்
மெய்யுணர்வு வருத்தவே மிக்கவுன் வீரத்தை
மேன்மையை, ஈகையை மனதார வியந்தேன்
வையகத்தில் நின்பெருமை நவின்றிடக் காத்திருந்து
வாய்த்த பொழுதினிலே வரைந்தேன் ஏற்றிடுவாய்!

காட்லிக் கல்லுர்ரியிற் கல்விபயில் காலை
கடமைக்குச் செல்லுமென் கண்களுக்கு நாளும்
காட்டுவாய் புன்னகை, பேரூந்துப் பயணத்திற்
கண்ணியமாய் எழுந்தெனை அமரச்செய் வாய்கல்வி
ஊட்டும் ஆசிரியர் உள்ளத்தில் நிறைந்த
உன்னத மாணவனாய் உயர்பேற டைந்தாய்!
வீட்டிலோ கடைக்குட்டி, வீணையெனத் தடவி
வளர்த்தனர், இன்றோநீ வானகத்து நிலவானாய்!

பாரளு மன்றத்து உறுப்பினர் பதவியைப்
பருத்தித்துறைத் தொகுதியிற் பாங்குடன் பெற்று
தாரள உளம்கொள் இல்லகத்தி யுடனிணைந்து
தக்கவே பாமரரும் தயவுடனே தேடிவரச்
சீராள ராய்த்திகழ்ந்து சிரிப்பினில் அணைத்துச்
செய்தசெயற் பேறதனால் வாழ்வினில் அவர்தம்
பேராள வாய்த்த பெருமகனே போற்றினோம்
புpறந்தாயோ? களத்தினிலே மீண்டும் இணைந்தாயோ?

பாசறை தன்னிலே மூன்றாம் அணியிற்
பக்குவமாய் இணைந்து பயிற்சியும் பெற்றாய்!
தேசுறு தோற்றம்கொள் தானைத் தலைவனின்
துணைமிகு காவலனாய்த் துஞ்சுத லின்றி
மாசற்ற மனத்தில் மன்னவன் உறங்கிட
மலர்ந்திருப்பாய் நாளும் விழித்திருப்பாய் நன்று!
பேசும் கரும்புலிக் கட்டமைப்பிற் சார்ந்திடப்
பேர்கொடுத்த முதல்மறவன் பின்னவன் நீயன்றோ?

போரியல் வரலாற்றில் நீபடைத்த வெற்றிகள்
பகர்ந்திட வார்த்தையேது? பார்தான் அறியும்
வீரியம் நிறைந்தவுன் விளையாட்டுக் கள்தம்மை
விண்ணவரும் அறிவர் நண்பரும் உரைப்பர்
சீரிய கொள்கையிற் றிண்மையிற் றிளைத்துத்
தென்தமி ழீழத் தொடக்கப்பணி களின்ஆணி
வேரென நிலைத்து விடுதலைப் புலிகளின்
வளர்ச்சிக்கு வித்திட்ட வல்லுனன் தானன்றோ?

நெல்லியடித் தாக்குதலில் நெஞ்சுறுதி மிகுந்திட
நேர்த்தியாய் நீநின்று இடையூறு நீக்கிடவே
மில்லரின் ஊர்தியது தளத்தினுள் ஊடுருவ
மின்னலென இயங்கித் தலைவனாய் உழைத்துத்
துல்லியமாய் உள்நுழைந்து துணிவுடன் தடைகளைந்து
தகைசார்; வீரனாய்த் தாய்மண்ணை அணைத்தாய்!
எல்லவனும் துயரத்தால் ஒளிவீச விருப்பின்றி
இருளால் உலகினை உறங்கிடச் செய்தனனே!

‘ஒருபோதும் ஆகாது உயிர்காக்கப் புறமுதுகில்
ஓடும் எதிரியின் உயிரினைப் போக்குதல்
பரிதவிக்கும் அவன்பால்; துமிக்கியினை வெடிக்காது
பாவம் பார்த்தல் பண்பாட்டு விழுமியமே’
அரும்பெரும் கருத்தினை அன்றாடம் ஊட்டியவுன்
அறிவுடைத் தந்தையின் எண்ணத்தைப் பேணி
மருவுதமிழ் மானிடனாய் மறவனாய் இனியவனாய்
மாநிலத்தில் இலங்கிய மாதவப் பேறே!

நிலையான புகழில் நெடிதுயர்ந்து நிற்கும்
நெஞ்சினில் விழுப்புண் கண்டவெம் வீரனே!
தலைவனின் பாதையிற் பொறுப்புடன்; நடந்து
தக்கவே இலக்கினை அடைந்தவுயர் மழவனே!
சிலையாக வடித்தோம்! சிந்தையிலே நிறைத்தோம்!
சிந்திய குருதிமண் தொட்டுநாம் வணங்கினோம்
விலையிலாக் கொடையினால் விடியல் தூரமில்லை
விண்ணவனே! பரமேஸ்வரா விரைவாய்! வருவாய்!

பவித்திரா

0 comments:

Post a Comment

Blog Archive