Sunday, October 3, 2010

ஈழகாவியம் - 05

0 comments

அத்தியாயம்07:நிகழ்காலம் விடுதலையை மதித்த வெள்ளைநாடு!

(எண்சீர் விருத்தம்)

நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்!
நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!
கொல்பவர்க்கு வாள்கொடுத்தாற் கொடுமை ஆகும்!
கூற்றுவனைப் பின்தொடர்ந்தால் மனிதம் சாகும்!
சொல்லுண்மை சரிபார்த்துத் தொடுதல் வேண்டும்!
சுதந்திரத்தை எல்லோர்க்கும் பகிர்தல் வேண்டும்!
வல்லோர்க்கும் தீமையிலா திருக்க வேண்டும்!
வளர்நாடு தர்மத்தை வணங்க வேண்டும்!


எல்லோர்க்கும் எல்லாமும் இயற்ற வேண்டும்!
எவர்கையும் தூய்மைக்காய் உயர வேண்டும்!
இல்லார்க்கும் இல்லாமை போக்க வேண்டும்!
ஏழைக்கும் கல்விக்காய் இறைக்க வேண்டும்!
கல்லார்க்கும் காரறிவு கொடுக்க வேண்டும்!
கயவர்க்கும் நற்போதம் கிடைக்க வேண்டும்!
சொல்லார்க்கும் உண்மைக்கே தேசம் வேண்டும்!
செய்கருமம் அர்ப்பணிப்பிற் சிறக்க வேண்டும்!


அவுஸ்திரேலி யாநாடு ஆர்க்கும் இந்த
அர்ப்பணிப்புக் குள்ளான அணிநா டாகும்!
குவித்தகணை வல்லாட்சிக் குள்ளே நாளும்
கொட்டுண்டு தமிழரினம் சாதல் கண்டும்
அவித்தஇறால் துடிக்குதென்ற இராச பக்சர்
அடுக்குகின்ற சொல்லொன்றும் கேளா நின்றும்
புவிவெள்ளைச் சில்நாடு போட்ட அந்தப்
புலித்தடையைப் போடாது புகழே கண்டார்!


பேர்நாடு என்கின்ற பெருமை யோடு
பெயர்ந்துவந்த வெள்ளையர்கள் போற்றும் ஆட்சி!
ஊர்நாடு பழங்குடியர் உரிமம் பெற்ற
உண்மைக்கும் அவர்பேணி உயர்ந்த நாடு!
கார்நாடு மாமழையிற் கனிந்த நாடு!
கங்காரு வாழுகின்ற காதல் நாடு!
தேர்நாடு இதுவென்றே செப்பும் வையம்
செந்தமிழன் சேர்ந்திருக்கும் சிறப்பு நாடு!


கல்விதனை உயிராகக் கண்ட ஈழம்
கைலையென அறிவார்ந்து மலையாய் நின்றார்!
சொல்லகவி வாதிட்டுச் சிறந்து அய்நாச்
செப்பருங்கால் நின்றவர்தான் ஜீச்ஜீப் பொன்னர்
நல்லானந் தக்குமாரன் இராணி முன்னே
நயந்திட்ட செந்தமிழர் நாவைக் கொண்டார்!
வல்லாளர் அறிவார்ந்தோர் வரையும் நீதி
வடிவாளர் அவுஸ்தியிலும் வார்ப்புப் பெற்றார்!


பெற்றமண்ணை வற்பகைவர் சூழ்ந்த போதும்
பெருஞ்சூது இந்தியத்தாற் பிடித்த போதும்
கற்றதொரு வைப்பிருந்தே ககனம் ஏறிக்
கங்காரு தேசத்தில் கனிந்தோம் நாமே!
உற்றநிலம் உயிராக உயர்ந்த பண்பை
உடையோராய்த் தமிழரெலாம் உயர்ந்தே நின்றார்!
விற்றுவிடத் தாய்நாடு விற்கும் எட்டர்
வெடுக்குவந் துற்றாலும் விழுந்தோம் இல்லை!


பேயாட்சி சிங்களத்தாற் போட்ட பிச்சைப்
பிடிகரத்தில் வசதியிடப் போனோர் பல்லோர்!
நாயாகி நக்குண்டார் நகர்ந்து பொய்ம்மை
நரியார்க்குத் தூதிட்டார்! நாடு விற்றார்!
சாயாத தமிழினத்தைச் சரிய வைத்தார்!
சரித்திரத்திற் பழிசுமந்த சகுனி யானார்
தாயாக நின்றதமிழ் நிலத்தோர் மட்டும்
தரணியெலாம் தமிழீழம் எழுதி வைத்தார்!


முப்பதினா யிரம்தமிழர் முழுதாய் நிற்கும்
மெய்நாடு அவுஸ்தியென விளங்கும் போதும்
ஒப்பருங்கால் வானலைகள் எங்கள் ஈழ
உயிர்வதையை உரைக்கும்கால் ஓர்பத் தாக
செப்பனிடக் காதினிக்கும் ஈழ நேசன்
தேர்இணைய ஊடகங்கள் திளைத்த தாலே
இப்புனிதக் காவியத்தை எழுது கின்றேன்!
என்னிதயத் தலைவனொடும் இதயம் கண்டேன்!


தமிழரொடும் வாழ்நாளைச் சுமந்த சங்கம்
தாயகத்தின் சுதந்திரத்தை நிறுவும் மாந்தர்
அமிழ்தமென ஆர்ப்பரிக்கும் அறிஞர் தம்மும்
அகதியென வந்தவர்க்கும் அளிக்கும் தோழ்மைச்
சிமிழாக நிற்கின்ற அவுஸ்தி நாடு
செந்தமிழீ ழத்தினொடும் சிறக்கும் நாளில்
உமியான எட்டப்பர், இடுப்புக் காசை
இழுத்தெடுப்போர் போய்மறைவர்! எறிக்கும் தேசம்!


கார்த்திகைநாள் வருகின்ற காலம் இற்றைக்
கவியேடு வரைகின்றேன் கண்ணீர் முட்டிக்
கோர்த்தவிழி மைந்தருக்குக் கோலம் போட்டுக்
கொண்டுலகம் வணங்குகின்ற நாள்தான் இன்று!
நேர்த்திவைத்துத் தீபமிட்டு இலட்சம் ஆக
நெடும்தேசம் எல்லாமும் தமிழர் நின்றே
பார்த்தவிழி பார்த்தழுது பாதம் தன்னில்
படிவைத்துக் கிடந்தழவே பார்வை கொண்டேன்!


எட்டப்பன் கண்டபயன் என்ன வென்று
இயலொருத்தன் எனைக்கேட்டான் என்ன வென்பேன்?
குட்டியொடும் படம்போட்டுக் கீற்றுக் கண்கள்
குடித்தவனின் சிவப்பேறக் கண்டோம் அன்றோ!
அட்டியிலே யோசப்பன், ரவிராஸ், ராஜன்(நிமல்)
ஆங்கிலமார் சிவராமும் மகேசன் என்றே
கெட்டவர்கள் சுட்டெடுத்த கேட்டைக் கண்டோம்!
கேடுஇதை மிஞ்சியொரு கேடும் உண்டோ?

மற்றபெண்கள் பார்க்காதான் மறவர் தம்மை
மாவீரம் ஆக்கிநின்ற மகானே என்போம்!
உற்றண்ணன் என்றவுடன் உயிரே வைத்து
உலகசைக்கும் கரும்புலியை இயற்பான் என்போம்
பெற்றாளைத் தன்னோடும் பிரியா னாகிப்
புத்திரரும் போர்க்களத்தில் நிற்க வைத்த
அற்புதனை ஆதவனை அகில முற்றும்
ஆட்காட்டி விரலிட்டான்! அவன்நாள் இந்நாள்!


சிட்னியிலும் மெல்பேர்ணும் நகரம் எல்லாம்
செந்தமிழர் ஒர்கரமாய்த் தொடுத்தே நிற்பார்
அட்டதிக்கும் மண்ணுக்காய் ஆர்க்கும் நாளில்
அவுஸ்திரேலி யர்நாடும் ஆர்த்தே நிற்பார்
கொட்டரவி கண்ணீரில் குளித்தே நிற்பார்
குருதியொடும் ஊனுருகக் சிதையில் நிற்பார்
தொட்டுப்பா வைத்தொருகால் தெய்வம் பாடிச்
செறிகின்ற நாளிதுவாய் சிறப்புக் காண்பார்!


வெறிப்பகைவர் வந்துற்றார் வெட்டிக் கொல்லும்
விசர்நாடார் வந்திட்டார் வீழ்ந்து பட்டுப்
பொறிநாடர் பல்லோராய்ப் புகுந்து விட்டார்!
புதையுண்டு போனாலும் எங்கள் மண்ணின்
நெறிகண்ட வெள்ளையர்கள் நேரும் நாட்டில்
நிற்கின்றோம் என்பதுவே நீதித் தாயின்
செறிவோடு தமிழீழம் செய்வோம் என்ற
சேதிக்கு வித்தாகும் துணிவே கொண்டோம்!


மாமனிதர் ஜெயகுமார் எலியே சருமாய்
வாழ்ந்துபுகழ் கண்டதுவே அவுஸ்தி நாடு!
சேமமுறத் தமிழ்வாழும் சிறந்த நாடு
சிறப்பான தமிழறிஞர் சூழ்ந்த நாடு!
காமமுறச் சிங்களத்தின் கசாப்பு ஆட்சிக்
கயவர்களால் இனம்சாகக் கண்டோம் ஆயின்
நாமமது தமிழீழ நாடு வைத்து
நானிலத்தில் நாம்சமைப்போம் நடக்கும் பாரீர்!

x........x..........x

இனப்படு கொலையைச் செய்யும்
இராசபக் சாவின் ஆட்சி
கனத்ததோர் நாளைக் கண்டோம்!
காவலர் சூழ்ந்து வந்து
மனத்தொடும் விழுந்த நோயால்
வருந்திய இளைஞன் தன்னை
அனர்த்தமாய்க் கொன்ற காட்சி
அகிலமெல் லாமும் கண்டோம்!


இரசீவின் பிடரிப் போடல்
இந்தியர் வக்கு இல்லாத்
துரவினர் மறந்தார் ஆயின்
துட்டர்கள் இன்று கொன்ற
நரபலிச் செயலிற் சிங்க
நாட்டொடும் படங்கள் கண்டோம்!
மரத்திடும் வெறிப்பேய் நாட்டை
மானத்தர் மறப்போம் அல்லோம்!


இற்றைநாள் ஈழத் தாயின்
இக்கதை எழுதும் வேளை
புற்றொடும் பாம்பாய் நின்ற
பேயவன் சரத்பொன் சேகாக்
குற்றமாம் கொலைகள் வைத்த
கொடுமைக்கு விளக்கம் கேட்டுச்
சுற்றிய அமெரிக் காவின்
செய்தியே எங்கும் கண்டேன்!


அடக்கியே முகாமுக் குள்ளே
அடைத்துவைத் திட்ட போதும்
கடக்கவே தமிழ மக்கள்
கடலிலே அடைந்த போதும்
இடக்கொடும் அவுஸ்தி நாடும்
இந்தோனி சியாவும் கொண்ட
முடக்கத்தில் அகதி யாளர்;
முற்றிலும் வருந்தக் கண்டேன்!


இத்தனைத் துயரின் மேலாய்
அகதிகள் படகு ஒன்று
தத்தளித் திட்ட போது
தாழ்ந்தது கடலின் உள்ளே!
செத்தனர் தமிழர் பத்தாய்ச்
செய்தியில் வந்து முற்றும்
வைத்ததே கண்ணீர் வெள்ளம்
வாதைதான் இன்னு மாமோ?


வெண்பா!

தீவைத்தான் கைக்குள்ளே தீகொடுத்துத் தான்நிற்கும்!
தீவைத்த நாடுகளாய்த் தீயில்லாமல்-நாவைத்து
நற்சொல்லிற் கண்ணீரை நனைக்கின்ற ஆஸ்திதனை
சொற்தமிழில் வாழ்த்துகின்றோம் சொல்!- புதியபாரதி (இப்பதிவு:02-11-2009)

0 comments:

Post a Comment