Sunday, October 3, 2010

ஈழகாவியம் - 09

0 comments

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:11 நிகழ்காலம்.
இந்தப் பொழுதின் மாவீரர் நாள்
கார்த்திகை மைந்தர் வணக்கம்!
(அறுசீர் விருத்தம்)

கார்த்திகைக் காலம் இந்நாள்!
கதையொடும் சிதைகள் நின்று
கோர்த்திடும் மைந்தர் பேச்சுக்
கேட்டிடும் நாட்கள் இந்நாள்!
வார்ப்பொடும் பாச நெஞ்சம்
வைத்தவர் உயிரைத் தூவிச்
சேர்த்தவர் ஒளிரும் தேசச்
சிற்பிகள் உலவும் நாட்கள்!

கைகளால் ஏத்தி நின்றோம்!
கனிமொழிப் பாடல் வைத்தோம்!
மைகரை அழியா மங்கை
மண்கரும் புலியாய்ப் போன
செய்களம் சிலிர்க்க நின்றோம்!
செந்தமிழ் அன்னைக் காகப்
பெய்தனர் ஆவி என்னும்
பெருங்கதை பாடு கின்றோம்!

சிந்தனை மண்ணுக் காகி
செயலெலாம் நிலத்துக் காகி
வந்தபே ரியக்க மாகி
வகுத்துயிர் கொடையே ஆகி
பந்தமாய்ப் புலியாய் ஆகிப்
பட்டறைப் பரணி ஆகிச்
சந்தமாய் ஒலியாய் ஆகிச்
சத்தியம் செய்தார் நாட்கள்!

மைந்தரை நினைக்கும் நாட்கள்
மறையாது இருக்கும் நாட்கள்!
சந்ததி சந்த திக்கும்
சரித்திரம் வைக்கும் நாட்கள்!
மந்தியாய் அந்நி யர்க்கு
மகுடியாய்ப் போகா மண்ணின்
வந்தேமா தரமாய் நின்ற
மறவரின் உருகும் நாட்கள்!

இந்தநாள் எழுதாக் கைகள்
இனத்தொடும் கைகள் இல்லை!
வந்தனை செய்யாப் பாடல்
வரலாற்றுப் பாடல் இல்லை!
சிந்தனை செய்யா மாந்தர்
செந்தமிழ்ப் பெற்றோ ரில்லை!
குந்தினோம் சிதையின் முன்னே!
கொஞ்சினோம் எங்கள் கண்ணே!

மாவீரர் போற்றி!

மாவீரர் போற்றி எங்கள்
மண்ணினை முத்த மிட்ட
காவியர் போற்றி! தேசக்
கடவுளர் போற்றி! நெஞ்சின்
ஓவியர் போற்றி! எங்கும்
ஒப்பிலர் போற்றி! உச்சச்
சாவிலும் உயிர்வாழ் கின்ற
சரித்திரர் போற்றி! போற்றி!

கடவுளே நீங்கள் வாழும்
காரிறை நீங்கள்! என்றும்
சடமெனப் போன தில்லைச்
சந்ததி வாழும் தீபச்
சுடரிடும் ஒளியே நீங்கள்
சுதந்திர வீரர் நீங்கள்
வடமென மாவீ ரத்தின்
மைந்தரே நீங்கள்! நீங்கள்!

தூயவன் உங்கள் அண்ணன்
துப்பர வான கண்ணன்
தீயவர் போலே காட்டித்
தேசத்தை விற்று விட்ட
மாயவன் இல்லை! மக்கள்
மனதிடும் சுயந்தன்! உங்கள்
தாயெனப் போதம் வைத்த
தலைவனின் பிள்ளை நீங்கள்!

நேர்த்தியை உமக்கு வைத்து
நும்சிதை கண்ணில் ஒற்றிக்
கார்த்திகைத் தீபம் வைக்கும்
காலமிக் காலம் ஐயா!
வேர்த்திடும் விழிகள் ஆறாய்
விளைந்திடும் கண்ணீர்த் துளிகள்
கோர்த்திடும் இந்த நாளே
குவலயம் எங்கும் தானே!

சாவிலும் போகீர் வீட்டுச்
சந்தெலாம் நிற்பீர் நின்று
பாவிலும் கதைப்பீர்! அம்மா
பாரென அழைப்பீர்! தாய்மை
நோவிலே பெற்ற போதும்
நிலத்திலே நுகத்தைக் ஏற்கக்
காவலே கொண்டீர்! ஊழிக்
கணங்களே வணக்கம் செய்தோம்!

தியாக தீபங்களே எங்கள்
தேச வணக்கம்!

நாடுக ளெல்லாம் நின்று
நமதுமா வீரர்க் காகப்
பாடுதல் செய்யும் காட்சிப்
பாரொடும் விரிகின் றேனே!
கூடுகள் திறக்கும்! தீபக்
கோவில்கள் அழைக்கும்! உங்கள்
ஏடுகள் கதைக்கும் தேச
இனமெலாம் உருகி நிற்கும்!




சாதிகள் பார்ப்ப தில்லைச்
சமயங்கள் பார்ப்ப தில்லைப்
பாதியில் நிற்கும் எந்தப்
பகுப்பெலாம் பார்ப்ப தில்லை!
சீதனம் பார்ப்ப தில்லைச்
செந்தமிழ் பெயரே வைத்துக்
காதலால் மண்ணை மீட்கக்
கனிந்தநீர் இறப்ப தில்லை!

உமக்கிலாத் தீபம் ஒன்றும்
உண்மையிற் தீபம் இல்லை!
உமக்கிடாப் பாடல் ஒன்றும்
இனமிடும் பாடல் இல்லை
உமக்கிடா வணக்கம் ஒன்றும்
ஈழமண் ஏற்ப தில்லை
உமக்கேதான் இந்த நாட்கள்
உறங்காது எங்கள் தில்லை!

வாராண்ட மொழியும் மன்னர்
வளமாண்ட நிலமும் கொண்டு
பாராண்ட சாதி தின்னும்
பகைவனின் வரவைக் கண்டு
போராண்ட வீரர் வேங்கைப்
புலத்திலே பரணி செய்தீர்!
நீராண்டு விழிகள் கொட்ட
நின்சிதை விழுகின் றோமே!

வேலிக்குள் நின்ற நங்கை
வேங்கையாய்ப் புறப்பட் டாளே!
பாளையாய்ச் சிரித்த செம்மல்
பகையொடும் பொருதி னானே!
காளையாய் வசந்தம் பெற்றும்
களப்புலி யாகி னானே!
வேளையிவ் வேளை உங்கள்
விரதமிட் டெழுதும் நாளே!

வரலாறு போற்றும்!
வரலாறு போற்றும்!

எத்தனை மாவீ ரர்கள்!
எத்தனை மாம னிர்தர்!
எத்தனை பற்றா ளர்கள்!
எத்தனை எல்லைக் காப்பர்!
எத்தனை மக்கள் மன்ற
இனத்துணை மனிதர்! மண்ணின்
சொத்தென நின்றார்! ஈழச்
சுதந்திரப் புருடர் தானே!

ஆட்சியால் அழிந்தோம்! யுத்த
அரக்கரால் மடிந்தோம்! தில்லிக்
கேட்டினால் முடிந்தோம்! ரச்சீவ்
குடும்பத்தால் அழிந்தோம்! மண்ணின்
பூட்டிய விலங்கொ டிக்கும்
புலிகளைப் பலதே சத்துக்
கூட்டிய படையே வந்து
குலைத்திடச் சதியே கண்டோம்!

மாவீரர் எங்கள் மண்ணின்
மறவரே! மக்கட் காகச்
சாவீந்த ஈழ மைந்தர்!
சாருயிர்க் கொடையின் வேந்தர்!
நாவேந்தர்! நவயு கத்தின்
நாதமாய் ஒலித்த காந்தர்!
பாவேந்தர்! நாட்டுக் காகப்
படிமமாய் நின்ற மாந்தர்!

தேவாரப் பாடல் வைத்தோம்!
தெய்வமாய்க் கோவில் வைத்தோம்
பூவாரம் தீபம் வைத்தோம்!
புலிகளின் கீத மிட்டோம்!
பாவாரம் சூட்டு கின்றோம்!
பார்த்தவர் சிதையின் வாசல்
நாவாரம் பேச்சுக் கொண்டோம்!
நாயகர் காட்சி கண்டோம்!

விழிகொட்டி ஆறாய் மல்க
விழுந்துமை வணங்கு கின்றோம்!
எழில்முகம் பார்த்து மண்ணின்
இளைஞரும் அணங்கும் வேங்கைப்
பொழில்நிலம் வந்து தித்த
புத்தகம் எழுது கின்றோம்!
வழிசொல்லிப் போனீர் ஆனால்
வரலாறு அழியா தையா!

மடிந்திடப் பாக்கிஸ் தானும்
மதத்தசோ னியளின் நாடும்
முடித்தவன் சீனா என்னும்
மேதினி தடித்த நாடும்
குடித்தவன் அந்நி யத்தின்
கூட்டிய எட்ட னோடும்
முடிந்திடப் போவ தில்லை
மீண்டிடும் உங்கள் நாடே!

இலட்சமாய்க் கொலையே கண்டோர்
இனத்திலெம் மாவீ ரரே!
வலத்தொடும் வந்த மண்ணின்
வதையிலே மடிந்தோர் எல்லாம்
நிலத்தொடும் குருதி யிட்டு
நெஞ்சொடும் நிற்போர் தாமே!
புலத்தொடும் ஒளிரும் தீபப்
பொழுதிது வணக்கம் செய்தோம்!

வெண்பா!

மானிடத்துப் பூங்கரத்தில் மாவீரர் ஆனபின்பும்
வானிடத்தும் போகாராய் வந்துநிற்பார்-ஏனங்கே
என்றுரைப்பார்! நின்றே எணையம்மா! என்றிடுவார்!
சென்றிடவே மாட்டாரெம் சேய்கள்!

0 comments:

Post a Comment