Sunday, September 5, 2010

ஈழகாவியம் - 03

0 comments

நிகழ்காலம்-04 சீனமும் கூனி நாடுகளும்..

எரிகின்ற வீட்டிலே பொறிவைத்துச் சீனத்தான்
ஈழத்தில் காலை வைத்தான்!
இந்திய நாட்டுக்கு இலக்கோடு நின்றாட
இலங்காவிற் கோலை விட்டான்!
வரிசையில் நாடெல்லாம் குகையாகி நிற்பவன்
வசமாகச் செய்து விட்டான்!
வடமிட்டு இடம்பார்த்துத் தடமோடு சுழிபோட்டு
வழியெல்லாம் இறுக்கி விட்டான்!
நெரிக்கின்ற வடிவத்தில் நேர்வட்ட மாலையாய்
நெம்புகோல் இறுக்கி விட்டான்!
நிசத்திலே சிங்கள நீசரின் நாட்டிலும்
நிலக்குகை தோண்டி விட்டான்!
பிரிகின்ற கணைகளைத் தில்லியின் பக்கமே
புறப்பட வைத்து விட்டான்!
பேயாக ஈழத்தைப் புரிவைத்த இந்தியம்
பிழைதின்ன வைத்து விட்டான்!


மியன்மரும் திபெத்தும் நேபாளம் பாகிஸ்தான்
விரைவாக ஊன்றி விட்டான்!
முடிவிலே காலியின் முகத்துமா கடலிலே
முகமொன்று செய்து விட்டான்
பயனொடும் பொருட்களைப் பலபக்கம் அனுப்பியே
பணக்குன்று செய்து விட்டான்!
பாரிடும் நாடுகள் பலத்தையே அசைக்கின்ற
படிவமாய் மா(ற்)றி விட்டான்
கயவனாய் மகிந்தனைக் கணித்ததும் அய்நவைக்
கைகாட்டி நிறுத்தி விட்டான்!
கனித்தழிழ் இனத்தையை கழுத்தொடு சரிக்கின்ற
சாப்புக்கு மாலை இட்டான்!
இயலாகி இசையாகிப் புதிதாகப் பயணித்த
இனமொன்றைக் கொன்று விட்டான்!
இந்தநூற் றாண்டிலும் இட்லரின் வாரிசை
இங்குமே ஆக்கி வைத்தான்!


ஆக்கியதன் மட்டோடும் அவனில்லை இலங்காவை
அடிக்கடி மிரட்டு கின்றான்!
அருணாச்சல் மாவோக்கள் ஆயுதங்கள் புலிகளுக்கு
அளிப்போமென் றுரைக்க வைத்தான்!
ஆக்கமொடு தான்நிற்கும் அம்பலாம் தோட்டையிலே
அரனுக்காய் நகர்த்து கின்றான்
ஆனான வெருட்டுகளும் ஆபத்தில் இலங்கமொடும்
அருநண்பன் என்று ரைத்தும்
சூக்காட்டி இந்தியத்துக் காஷ்மீரம் தனைச்சொல்லிச்
சினம்கொள்ள வைத்து விட்டான்!
சிங்களத்தும் சீனமொடும் சேர்ப்பினிலே நிசம்பாடத்
தினத்தாளம் போடு கின்றான்!
தாக்காட்டித் தமிழகத்தைத் தலைக்கருணா நிதியோடும்
தமிழீழம் அழித்து விட்டுத்
தறிகெட்ட இந்தியர்க்குத் தக்கபதில் சீனம்தான்
தருங்காலம் இனிக்கா ணுமே!


இலங்கவின் இராணுவம் இன்றுசீ னத்தொடும்
இணைந்துமே காணு கின்றார்!
இராணுவ மாவோக்கள் இங்கெல்லாம் தன்படை
இன்றுரு வாக்கு கின்றார்!
உலங்குவிண் ணூர்தியும் ஓடிடப் பாகித்தன்
ஓட்டுனர் குடிபெ யர்ந்தார்;!
உடையோடும் காணியதும் எழிலான வீடும்தான்
இலங்காவான் கொடுத்து நின்றான்!
நிலங்களிற் சிங்களர் நிறைந்துமே வன்னியின்
நெடுகிலும் வந்து விட்டார்!
நெட்டுரத் திந்தியம் நிலையிது தெரிந்தும்தான்
நீசர்கைத் தீக்கொ டுத்தார்!
கலங்கிய வாழ்வதும் கந்தல்கள் ஆனதும்
கனிநிலம் எரிவ தற்கும்
கடைகெட்ட இந்தியக் கயவரே காரணம்
கண்டது தமிழீ ழ(ம்)மே!


இரச்சிய நாடது ஏழையின் மாட்சியில்
இலட்சியம் கண்ட துண்டு!
ஏரொடு வாளதும் சுத்தியல் தன்னொடும்
இலச்சினை யார்த்த துண்டு!
கரத்திலேன் ஆயுதம் கண்டனன் தமிழனே
கணக்கது தெரிந்தி ருக்கும்!
கனியவள் இந்திராக் காலமிட் டதுவுமே
கட்டாயம் புரிந்தி ருக்கும்!
மரத்தசிங் களத்திற்கு வான்கணை கொடுத்திட
வந்ததேன் இரச்சி யம்மே?
மரணமே வாழ்வென மடிந்திடும் சாதிக்கு
வந்ததே அதிர்ச்சி யம்மா!
உரத்தவோர் குரலிலே உண்மையே சொல்லியும்
உணர்ந்தவர் எவரும் இல்லை!
உலகினில் இருபதாய் நாடுறும் தமிழரும்
இடித்துமெப் பயனு மில்லை!


நேரமோர் துளியிலே ஆயிரம் குண்டுகள்
நெருப்பெனப் போட்டு நின்றார்!
நெடிதுயர் மரங்களும் நிலத்துமண் ணுயிர்களும்
நீறெனக் கருக்கி விட்டார்!
கோரவான் குண்டுகள் குவித்துமே போகின்ற
கிபீர்க்குமி வர்தான் ஓட்டி!
கெட்டவர் வரிசையில் பாகியர் ஆக்கிய
கேட்டுக்கும் உண்டுநாட் காட்டி!
பாரதிரப் பலவாகி பலநூறாய் வெடிப்பிடும்
பாகிஸ்தான் குண்டு கள்தாம்!
பசுங்கிளி தமிழ்ச்செல்வன் பலியிட வைத்ததும்
படுகுண்டு இதுபட் டுத்தான்!
ஈரவர் ஈழத்தில் இந்தியம் எதிரிக்கே
இடம்வைத்துப் போன தல்லால்
இனத்தமிழ் மண்ணுக்கு ஏன்வந்தார் என்பது
இதுவரை தெரிய வில்லை!


சுயநலத் தோடுதான் சீனமோ டன்னியர்
சிறீலங்கா வந்து நின்றார்!
சிங்களத் துக்கென்ன சாவொடும் தமிழரே
சென்றிட்டாப் போதும் என்றார்!
அயல்நெருப் பானதும் அணிநிலம் வெந்ததும்
அருவருப் பான தொன்றே!
ஆண்டுபல் லாண்டுகள் அடிமையே பட்டதெம்
அறவழி வெந்த திங்கே!
பயலெலாம் இலங்கவில் பயன்பெற வென்றுதான்
பகைகொண்டு எமைய ழித்தான்!
பத்துநூ றல்லவே பல்லாயி ரம்மெனப்
பார்த்ததும் இந்த நாட்தான்!
துயரிலே அமெரிக்கம் தேர்ந்தஅய் ரோப்பும்
துடித்ததும் மானிடம் தான்!
தீதந்த நேரத்தில் அணைத்திட வலுவில்லை
தெளிவில்லை அய்நா வும்தான்!


சுதந்திரம் பெற்றபின் மதத்ததே சிங்களம்
சீவினார் கொலைகா ரர்கள்!
தெருவிலும் வளவிலும் தென்னிலங் கையிலும்
சாவிட்டார் எமையா ளர்கள்!
பதந்திரு என்றடிப் பணிந்துபோய் நின்றுமே
பலிதந்து போனது ஆட்சி!
பலகல்வி நுட்பமும் தலமென்று கொண்டமண்
பறந்துபோ னதுவே காட்சி!
சிதலங்கள் சாவுக்கள் செல்வாவின் விழிநீர்கள்
சிதறிய போது தானே!
சிலம்பிட்ட தமிழனைச் செகவலாம் காணவே
செய்தது தர்ம வாளே!
மதத்தவர் சேனையும் மரணமே கொடுக்கவும்
மறவர்கள் அறத்தின் பாலாம்!
மடியிலே எட்டப்பர் வழியொடும் கெட்டப்பர்
வருமடா வெல்லும் நாளாம்!


வெண்பா!
சீனரும் இந்தியமும் பாக்கியரும் ரஷ்யத்துக்
கோனாரும் கொட்டிக் குடியழித்தார்-மானாரும்
தேனாடு தீயத் திசைநச்சம் வீழ்ந்தாட
ஈனாராய்க் கொன்றார் எழியர்!

நிகழ்காலம்-05 அகிலமும் அமெரிக்கமும்

கற்பழித்துக் கொலைசெய்தார், கனர கத்துக்
காலேற்றி உயிரோடு கருக வைத்தார்!
முற்றுமுழு தாயழிக்கக் குண்டு நச்சாய்
மூர்க்கரிட்ட வன்கொடுமைக் குரைதான் உண்டோ?
சொற்பதத்தில் இராட்சதமும் அரக்கர் என்ற
சொல்லிட்டுக் குறிக்கின்றோம், சாவின் காடு
எற்றிவைத்த இராசபக்சா ஈழ மண்ணின்
இராட்சதனே அசுரனென எழுது கின்றோம்!


முள்ளிவாய்க்கால் நந்திகட லோரப் போரில்
விசக்குண்டு வீசுங்கால் மக்கள் செத்துக்
கொள்ளியிடக் கூடாமல் குருமான் குஞ்சும்
குருதியொடும் நிலங்களிலே சிதறிப் போக
அள்ளுகொள்ளை யாய்நெரிந்து இராணு வப்பேய்
அடிமைகளாய்ப் போனதினால் இலட்சம் மூன்று
தெள்ளுதமிழ் மக்களுமாய்த் தீயில் வெந்த
தினம்கண்டே அமெரிக்கம் தெளியக் கண்டார்!


தமிழ்மக்கள் தன்னோடும் தலைவன் பிரபாத்
தம்பியொடும் காப்பாற்றத் தமியான் ஆகிச்
சுமைநீக்கம் ஒபாமா செய்வார் என்றே
செகமெல்லாம் நம்பியதே சிங்க ளத்து
அமைவான சொல்கேட்டே அமெரிக் காவும்
அரசநெடும் போர்நிற்கும் என்றே நின்றார்!
இமைகாணப் பெருந்துன்பம் இன்றே கண்டார்!
இராசபக்சாக் கொடியரையே இனம்கண் டாரே!


வெள்ளைநா டென்றாலும் விதந்தே நிற்கும்
விருப்பமுள மக்களொடும் விளங்கும் நாடு
முள்ளிருக்கும் மாந்தருக்கு முடிவே கட்டும்!
முத்தான மாந்தருக்கே முகமன் சொல்லும்!
துள்ளிவர நீதியிடும் துணிவு காட்டும்!
தேசத்தில் அமெரிக்கா துணிந்த தேசம்!
கள்ளமிலார் அரசியலைக் காட்டும் நாடு!
கணிதமிலார் தனைப்பதவி காட்டா நாடு!


ஆபிரகாம் லிங்கன்வந் துற்ற நாடு
அடிமைநிலை ஒழிக்கவென ஆர்த்து நின்ற
தீபமென ஒளிதந்த மாட்டின் லூதர்த்
திருமகனார் வந்துதித்த திருத்தாய் நாடு!
சாபமெலாம் போக்கிவிடச் சரிதம் வைத்த
சரித்திரமே ஒபாமாவார் சார்ந்த வெற்றித்
தூபமொரு அமெரிக்கம் துணிந்தே செய்த
துல்லியமீ தென்னாளும் சிறப்புக் காணும்!


சந்திரனின் மேற்பரப்பில் கால்ப தித்த
சரித்திரத்தை உலகமுதற் சான்ற நாடு!
முந்திவந்த சனபதியர் பல்லோ ருள்ளும்
முத்திரையிட் டேற்றிவைத்த முத்தார் நாடு
இந்தயுகம் வரையீழம் போரே கண்டு
எண்ணற்ற போர்க்குற்றம் இழைத்த ஆட்சிக்
குந்தகத்தை அறிக்கையிலே கொண்ட நாடு
கொண்டெங்கள் தமிழீழம் குறிக்கின் றோமே!


போர்நாளும் போர்ப்பின்னும் புவிநா டெல்லாம்
பெரும்பாடு பட்டார்த்துப் பேசி னாலும்
ஓர்நாளும் மசியாதான் இராச பக்சா
எரித்துவிட்ட சாம்பலினைப் பார்த்தே இன்று
நார்வாரக் கல்லினையே நாடி வந்தார்!
நமதுமக்கள் துயரமதை நவின்றார் கேள்மின்
கூர்வாராய் அமெரிக்கக் கிலாரி சொன்ன
கூற்றினிலே இலங்காதான் குழம்பி விட்டார்!


சிறிலங்கா மீதான போர்க்குற் றத்தைத்
தெரிந்தைநா மன்றத்தின் திருவில் வைத்துக்
குறிவைத்துக் கதைப்பதற்காய் கொணர்ந்த போதும்
குவலயத்தில் மானிடத்தைக் கொள்வா ரோடும்
நெறிவைத்து அமெரிக்கம் துணிந்த போதும்
நெட்டுரமாய் இந்தியத்து நீசர் வைத்த
பொறிதன்னில் இரச்சியமும் பொரிந்த சீனாப்
பொல்லாதார் தடுத்தாரே பொறுக்க மாட்டோம்!


சுயநலத்திற் காகவென ஈழம் சாகச்
சோனியளின் காங்கிரசும் தீயர் ஆன
பயல்மூக்கா தன்னோடும் பழியே தீர்க்கப்
பலியிட்டார்! ஈழத்தார் பதைத்த கண்ணீர்ப்
புயலிட்ட வேளையிலும் வெள்ளை நாட்டுப்
பொன்மனத்தார் சிறீலங்கா தன்னைக் கேட்டுச்
செயலிட்டார்! சினந்தார்கள் தீர்வைக் கேட்டார்!
செத்தவினம் எனினும்நாம் சொன்னோம் நன்றி!


எலைன்ஷன்டர் அமெரிக்க மனித மாதாள்
இராசபக்சா இயற்றிநின்ற கொடுமை தன்னை
அலையாக வைத்தவொரு அடுக்குச் சொன்னாள்!
அரக்கத்தின் வாய்ப்பாடு அடுக்கிச் சொன்னாள்!
கொலைவாளை வைத்தவர்கள் கூடா ரம்போல்
கொலைகொள்ளை கற்பழிப்புக் கூட்டாய்த் தந்த
வலைகாரர் எல்லாமும் வடிவாய்ச் சொன்னாள்!
வாதையினைக் கூறிநின்றாள் வையத் தார்க்கே!


ஊருக்குக் கதைசொல்லி இராச பக்சர்
ஒழிக்கின்ற நடிப்புத்தான் இன்னும் உண்டு!
போருக்குப் பின்னாலே பெயர்ந்தோர் எல்லாம்
போவார்கள் சொந்தவிடம் என்றே சொல்லி
மோருக்குப் பின்னாலே கள்ளை வைத்து
முடிச்செல்லாம் இராசபக்சா மொய்த்த நேரம்
தேருக்கு வடம்பிடிக்கத் தேசம் பல்லாய்த்
திரும்பிவிடக் கதைதருவார் தெளிவாய்க் கண்டோம்!


நூற்றுக்கும் மேலான போர்க்குற் றங்கள்
நேராகப் பதினாறாய் நின்ற நாளில்
கூற்றுக்கும் கூற்றாகிக் கொழுத்தி வைத்த
கொடுங்குற்றம் படத்தோடு கோடு காட்டி
ஆ(ற்)றுநூறு பக்கத்தில் அறிக்கை செய்து
அமெரிக்கம் அறிக்கையிடச் செய்த தென்றால்
தோற்றுப்போய் விட்டோமா? இல்லை யில்லைத்
துடிக்காதே என்தமிழா தேசம் வெல்லும்!


செப்ரெம்பர் பதினொன்று குறிக்கும் நாளில்
தீயாகி அமெரிக்கா துடித்த நாளில்
தப்புக்குப் பேர்போன புச்சின் ஆட்சி
தடையென்ற அறிவிப்பைத் தந்த போதே
ஒப்புக்கும் உயர்வுக்கும் உடைத்தோர் ஆன
உயிர்நிலத்து வேங்கைக்கும் இட்டார் வேலி
இப்புவியில் புலிக(ள்)தடை இணைத்துச் செய்த
இச்செயலே இன்றழிவுக் கெல்லாம் காலே!


இரண்டாயி ரத்தொன்பத் தியன்ற போரின்
ஈழமக்கள் சாவெடிலை எடுத்த காலம்
முரண்டுபிடித் தாடிநின்ற வெறியர் நாடர்
முற்றுமுழுத் திந்தியமும் சீனம் ரஷ்யா
திரண்டதொரு கந்தகத்தால் தமிழர் தீய்ந்துத்
தெருக்கூத்தை ஆடியபின் தேசம் செத்த
வரலாற்றை எழுதுகின்றேன் வாதைக் குள்ளும்
வையத்தில் சிலதேச வணக்கம் செய்தேன்!


நாடுகடந்த தமிழரசே நடுவீர் என்றே
நல்லநிலை ஒன்றுண்டு நலிந்தார் எம்மின்
ஊடுநின்று போர்க்குற்றம் இலங்கா மீதில்
உரைகாட்டும் செயலொன்றும் ஈழ மண்ணின்
கோடுநின்று மானிடத்தின் குறியும் சொல்லும்
கொள்கையொன்று அமெரிக்கக் கூட்டில் கண்டோம்!
ஓடுகின்ற குருதியொடும் உண்மை தேடி
உரைத்துவிட்ட அமெரிக்கம் வாழ்த்துச் சொன்னேன்!


வெண்பா!
மானுடத்தின் சாசனமாய் வந்தார் ஒபாமாவார்
தேனார் அதிபதியாய்த் தேர்வீரே-ஈனரிடம்
போர்க்குற்றம் சொல்லிப் பொழுதிட்ட காரணத்தால்
ஈர்த்தாரெம் நெஞ்சம் எடு!

பிற்குறிப்பு 1:செப்ரெம்பர்11-ஜோர்ச் புஷ் சனாதிபதியாக இருந்த காலத்தில், செப்ரெம்பர்-11-2001இல் பின்லாடன் செய்ததாகக் கருதப்படும் நியூயோர்க் உலகச் சந்தைக் கட்டிடம் சாம்பலான சம்பவம்)

பிற்குறிப்பு 2:ஒபாமா-இன்று அமெரிக்கச் சனாதிபதியாய் இருக்கும் ஒபாமா என்ற கறுப்பரின வழித்தோன்றல்

பிற்குறிப்பு 3: மூக்கா-மு.கருணாநிதி

(1-புலத்துக்காண்டம்- 2 யுத்த காண்டம் -3 ஈழ காண்டம் 4-வஞ்சர் காண்டம்(சிறீலங்கா) 5-வாகைக் காண்டம்(ஈழமண்ணின் சமகாலத்து இருப்பு) என நீளும் இந்த ஈழகாவியம். பொறுமையுடன் இதயத்தே இருத்துங்கள் ஈழநேசனின் அன்பு வாசகர்களே!-புதியபாரதி)

Wednesday, September 1, 2010

ஈழகாவியம் - 02

0 comments

1-உதயப்படலம்

நிகழ்காலம்-02

ஈழத்தைச் சுற்றிலும்.. இந்நாள்

(அறுசீர் விருத்தம்)

இந்துமா கடலைச் சுற்றி
எத்தரின் கூடா ரங்கள்!
கந்தகச் சுரங்கத் தோடு
கயவராய்ப் பலநா டுகள்!
செந்தமிழ் நிலத்துட் சிங்கச்
சேனையர்க் காகக் கொட்டி
வந்தவல் லரசார் எல்லாம்
வன்னியை முடித்தே விட்டார்!

தாங்கொணாக் கொடுமை யாலும்
தமிழரை இனமாய்க் கொல்லும்
தீங்குவார் ஆட்சி யாலும்
தீமையே உமிழ்வா ராலும்
ஓங்கிய அரக்கத் தாலும்
உயிர்நிலம் பறித்த லாலும்
வேங்கையர் ஆன மண்ணை
விசமிகள் எரித்தார் இந்நாள்!

முப்பது ஆண்டு காலம்
முடிவிலாப் போரி னாலே
அப்பிடச் சிங்க ராட்சி
அரக்கராய் அழித்தார் ஆயின்
துப்பிடும் தீர்வென் றாலும்
துட்டர்கள் வைத்தா ரில்லை
உப்பிநூற் றாண்டு காலம்
உலையினிற் தமிழர் செத்தார்!

இலங்கையைத் தங்கள் கையில்
இருப்பதற் காக வென்று
அலம்பிய கையின் ஈரம்
ஆறுமுன் ரசீவான் வந்தார்!
கலங்கிய குளத்தில் மீனை
கடகமாய் அள்ள வந்தும்
துலங்கிய அறிவில் லாமல்
துடித்தவோர் மரணம் கண்டார்!

யானைதன் கையி னாலே
மண்ணிடும் அதுபோ லத்தான்
ஏனையில் இராச பக்சா
இருக்கவும் இந்தி நாட்டார்
பானையில் ஆயு தத்தைப்
படைத்தனர் ஆனால் அந்தச்
சீனனைத் தடுக்க எண்ணிச்
செந்தமிழ் நிலத்தை விட்டார்!

ஈழமண் அழிப்பா ருக்கே
இந்தியம் கூட நின்றும்
பாழது தெரிந்தும் அள்ளும்
பணத்திடை சாக வென்று
தோழமைச் சோனி யாளின்
துட்டர சாங்கம் தன்னில்
கோழையர் கருணா நிதியார்
கோடரிக் காம்பாய் நின்றார்!

முன்னூறா யிரமாய் மக்கள்
முட்கம்பிக் கிடையே வைத்து
இன்னுமோர் கிட்லர் போன்றெம்
இனத்தையே மகிந்தன் கொன்றான்!
வன்னியை இராச பக்சா
வளைத்துமே சிதறச் செய்த
நன்னெறி இல்லா னுக்கே
நயந்ததே காந்தி வம்சம்!

சென்னையின் கோட்டை என்றும்
செந்தமிழ் ஆட்சி என்றும்
தன்னலம் ஒன்றிற் காகத்
தமிழ்தமிழ் என்றே சொல்வார்!
இன்னொரு இனமா அட
இரத்தமோ டுறவாய் நிற்கும்
அன்னையின் மக்கள் தன்னை
அழித்திடப் பார்த்தே நின்றார்!

புலியினர் என்ற வேங்கைப்
பொய்யிலார் ஏற்ற போரைத்
தொலைவெதும் இல்லார், பக்சத்
தீயரை ஓரா நாட்டார்
கொலைவளர் இலங்கத் தீவைக்
கொஞ்சிடும் நாள்தான் இந்த
அலையுளம் எழுது கின்றேன்
அஞ்சலாய் வரைகின் றேனே!

செத்திடும் தமிழச் சாதி!
சிங்களம் துடைத்த ழிக்கும்
புத்தரின் கோட்பா டெல்லாம்
புல்லருக் கில்லைத் துட்டர்
வைத்ததே சட்டம் வெந்து
மடிவனே தமிழன் என்றே
எத்தனை சொன்னோம்! அற்ப
இரசீவான் அறிந்தா னில்லை!

போரிலே தீரம் கண்டார்
புத்தியின் ஆரம் கண்டார்
பேரியற் தலைவ னான
பிரபாவைக் கண்டார் இந்த
வீரனே நாடு செய்தால்
வென்றொரு யூதம் போலே
தூரிகை ஆகும் என்றே
துடைத்தனர் இந்தி யத்தார்!

கொன்றிடும் சிங்க ராட்சிக்
கொடியவன் தன்னை ஓரார்
இன்றவன் குண்டில் தீய்க்கும்
இராட்சதம் தன்னைத் தேரார்
வன்னழிப் பிற்குப் பின்னே
வையவர் வந்தார்! கேட்டார்!
மன்பதைப் படலம் எல்லாம்
மடையருக் குரைத்தார் சென்றார்!

ஈழத்தின் எரிநாள் கொல்லும்
இராட்சதர்த் திருநாள் என்றும்
ஏழனர் வதைநாள் கூற்றர்
இழுத்திடும் பதைநாள் குச்சில்
ஏழையர் அழுநாள் வையம்
ஏதிடா விதுநாள் இன்னும்
வாழலாம் என்று சொல்லி
வருபவ ரெல்லாம் பொய்யே!

இந்தியம் சீனம் பாக்கி
இரச்சியா ஈரான் கியூபா
அந்தகம் இருபத் தாக
அச்சிலே வந்த போதும்
எந்தையும் தாயும் மன்னர்
ஏற்றிய தர்ம பூமிச்
சந்ததிப் போரின் கூர்வாள்
சரித்திரம் படைக்கும் ஓர்நாள்!

வெண்பா

வேங்கையாய் நின்றநிலம் வேரிழந்து போவதற்குத்
தீங்குமனத் திந்தியமே தீயிட்டார்-காங்கையில்
ஈழத்தே நின்று இராட்சதர்கள் கூட்டியள்ளக்
கூழக்கை இட்டாரே கொள்!

1-உதயப்படலம்

நிகழ்காலம் -03

இந்திராவுக்குப்பின் இந்தியா

(எழுசீர் விருத்தம்)

பாரதம் என்றும் பண்புநா டென்றும்
பாலபா டந்தனில் படித்தோம்!
வேரது ஓடும் வேதநா டென்றும்
வேள்வியும் ஓமமும் விளைக்கும்
ஈரநா டென்றும் இந்தியம் என்றும்
ஏடுகள் அன்றெலாம் இயற்றும்
சூரநா டின்று செல்லரித் திட்ட
சூதுநா டென்றெலோ ஆச்சு!

இந்திரா காந்தி ஏற்றிய ஆட்சி
இந்தியச் சரிதமார் சிறப்பாம்
தந்தையார் நேரு தங்கமார் மகளாய்த்;
தாங்கிய சகாப்தமே தனியாம்!
நொந்தவங் கத்தை நெம்பிட வைத்து
நிமிர்த்திய பிரதமர் அவளே!
எந்தவல் லர்க்கும் இன்னொரு நாட்டும்
இவள்பயம் கொண்டதே இல்லை!

மோதிலால் பேத்தி நேருவின் பிள்ளை
பெற்றனள் கல்வியொக்ஸ் போட்டில்!
நீதிதாம் கொண்டு நெஞ்சில் மானிட
நித்திலம் கொண்டதோர் பெண்ணாள்!
காதலன் பெரொஸ்காந் தன்னொடும் வாழ்வில்
கண்டனள் பிள்ளைகள் இருவர்!
மாதவக் காந்தி மகாத்மாவொடும் தேச
மகத்துவப் போரதும் கண்டாள்!

பேருறும் காந்திப் பிள்ளைகள் இருவர்
பெரியவன் ரசீவு,பின் சஞ்சய்
பாருவந் தேத்தப் படித்தனர், கணவர்
பற்றிய வாழ்க்கைவிட் டகன்றார்!
நேருவின் மகளாய் நின்றதோர் பேராள்
` நிகழ்வொடும் பிரதமர் ஆனாள்!
சீருற நின்ற சிறப்பொடு வாகை
செப்பிடும் பாரதம் வைத்தாள்!

வாருருப் பெற்ற வல்லமை நாடாய்
வளர்த்தனள் இந்திராத் தாயார்!
பாரிய விபத்திற் சஞ்சயும் இறந்தார்
பதைத்தவ ளாயினும் தந்தை
நேருயர் மகளாய் நிமிர்ந்தபா ரதத்தின்
நிழலென ரசீவொடும் நின்றாள்
பாருவந் தேற்றப் பாரதம் ஏற்கப்
பட்டொளி ஆகினள் பாரீர்!

ஈழமா மண்ணின் இதயமாய் நின்ற
இந்திராத் தாயரைக் கண்டோம்!
பாழராம் சேயார் பார்த்திருந் தழிக்கப்
பண்ணிய கலவரம் தன்னில்
ஆழமாய்ச் சொற்கள் அன்னையள் பகன்றார்
அகதிகள் தன்னையே ஏற்றார்!
வேழமா மென்க ஈழமாத் துயரை
விதைத்தனள் உலகெலாம் தானே!

தமிழவர் இதயம் தாங்கிய பெண்ணாய்
தந்தவர் இந்திராத் தாயர்
அமையவோர் ஈழம் ஆக்கிடும் தீர்வை
அரனென வைப்பளென் றிருந்தோம்!
சுமையொடு சுமையைச் சுமந்தவர் ஆனோம்!
சொர்ணமாம் அம்மையைச் சுடவே
கமழ்நிலம் முழக்கக் கண்ணிமை நீரிற்
கலந்ததே சரித்திரம் ஆச்சு!

இந்திரா வொடும்நம் ஈழமும் வெந்து
எடுத்தது சிவிகையே அவர்க்காம்!
சந்திசந் திவாழைக் கமுகுதோ ரணமும்
சாற்றிய பறைகளும் வைத்து
எந்தவோர் மகற்கும் இல்லையென் றிடவே
ஈழமும் எரிந்தது கண்டோம்!
வந்தது வினையே வந்தர சீவார்
மாற்றினார் கதையினைத் தானே!

ஈழமா மண்ணின் எரிநிலை முற்றும்
இன்றுவந் தவரெலாம் தெரியார்!
ஆழவே ரூன்றி அரக்கமே கொன்றிடும்
ஆனநூற் றாண்டினைத் தெரியார்
சூழவே தங்கள் சுயநலம் கொண்டு
சுழல்பவர் வந்துமே தமிழர்த்
தோழமை தின்றார் தேசெலாம் எரித்தார்
தீய்ந்தது ஈழமா மண்ணே!

இந்தியப் போக்கின் இழிநிலை யாற்றான்
இன்றுபல் லாயிரம் செத்தார்
கந்தகத் தீயைக் கக்குமொரி லங்காக்
கயமையைத் தெரிந்திடாக் கணக்கர்
வந்தனர் அமைதிப் படையெனும் பெயரில்
வற்புணர்ச் சாவினை வைத்தார்!
இந்தநூற் றாண்டு ஈழமே சாவொடு
இயற்றிய தெல்லமும் இவரே!

வேண்டவே வேண்டாம் விசரிது என்றே
வேங்கையின் மைந்தனும் சொன்னான்
காண்டிபம் எங்கள் களமது சிங்கக்
கடியரை வென்றிடும் போங்கள்
தாண்டி வந்தால் தமிழரின் வாழ்வில்
தருவது எல்லமும் தீயே!
வேண்டினன் பிரபா வேடனன் ரசீவால்
விளைந்ததே ஈழமார் எரிப்பே!

விடுதலைப் போரில் விளைதமிழ் ஈழம்
வேங்கையாய் மலர்ந்ததும் இந்நாள்
படுகொலைப் பாதை பரவுநாள் எல்லாம்
பரவிய குரதியின் சேற்றில்
நடுநிலை கெட்டு நாடெலாம் விரித்த
நச்சுவா யுதமெலாம் வைத்தே
கெடுதலைச் செய்த சிங்களப் பதரர்
கொழுத்தினர் தமிழ்நிலம் முழுதும்!

ஈழமார் கதையே எடுத்தறி விக்கும்
இந்தநாள் உள்ளுவ தெல்லாம்
ஆழமாய்க் கொண்ட அவனியின் போக்கை
அடுக்கிய தாகவே செல்வேன்!
சோழவை சேரர் பாண்டியர் மன்றில்
சிறப்பிட நின்றவள் அன்னை
தோழமை தந்த ஈழமண் துரவித்
தீந்தமி ழாளொடும் வருவேன்!

இந்திரா சாக இனிப்புகள் வழங்கி
இலங்கையி ருந்ததைக் காணார்!
வந்தணி வகுப்பில் வந்துர சீவான்
வாங்கிய அடிதனும் வருந்தார்!
இந்தியப் பாதை எதிரியாய்த் தமிழர்க்
கிருப்பவர் தன்னையே வைத்து
இந்தநூற் றாண்டை எரித்தனர் என்றே
ஈழமே நாளெலாம் எழுதும்!

வெண்பா!

இந்திரா நீத்தாள் இரசீவான் வந்திங்கே
சிந்தனையி லோராமற் செய்தகளம்-சிந்தார்
புலிகள் அழியப் பொறிவைத்த தாலே
வலிமை இழந்ததுவே மண்!

- புதியபாரதி