Popular Posts
Sunday, October 3, 2010
ஈழகாவியம் - 08
at
10:01 PM
Posted by
எல்லாளன்
0
comments
புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:10 நிகழ்காலம்.
தமிழ்நாடு
(அகவல்)
முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ
சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!
பாக்குநீர்ச் சந்தியிலும் பலியிட்டுச் சிங்களவன்
மூக்குமுட்ட வந்தாடி முடிச்சிறுக்கிப் போகின்றான்!
ஐந்துநூறு செந்தமிழர் ஆகுபலி யானபின்னும்
இந்தியர்கள் அவர்களென்று இத்தாலி யாளுணராள்!
வருநாளெல் லாமிருக்கும் வருவாய்க்கே என்றவர்தான்
கருணா நிதியென்று கணக்கிட்டார் தில்லியடா!
பாரதியும் தாசனுமாய்ப் பார்புகழும் வள்ளுவரும்
ஆறுபோல் கவியிட்ட அருங்;கண்ண தாசனுமாய்க்
காளிதாசன் தேசிகனும் கார்மறைத் திருமுறையும்
வாளோடும் மலர்விழியாள் மானதமிழ்த் திருக்கரத்தில்
அவ்வைத்தாய் மானவரும் ஐம்பெருங் காப்பியங்கள்
செவ்வனே பாட்டிசைத்த திருக்குலம்தான் தமிழ்நாடு!
செம்மொழியாள் தமிழவளின் தேரோடும் பொற்காலம்
எம்மொழிக்கும் முன்னுதித்து இவள்பிறந்த காரணத்தால்
இலக்கியங்கள் இதிகாசம் எழிலாழ்வார்ப் பாசுரங்கள்
நிலத்தடியில் போனவையும் நெடுங்கடலே விழுங்கியதும்
இன்றுமிருக் கும்மெனிலே ஏழுலக மெல்லாமும்
சென்று தமிழினிக்கச் செம்மொழியாள் நின்றிடுவாள்!
பாவோடு இலக்கியமும் பச்சை நிலமண்ணும்
சாவோடு நிற்குமிந்தச் சரித்திரமே இந்நாட்கள்!
ஆங்கிலமும் அரைத்தமிழும் அரசாட்சித் தமிழ்விற்றுத்
தூங்குமொரு கேடுகண்ட திருநாடு தமிழ்நாடாம்!
வீட்டுக்கு வீடு விளங்கிவரும் தொலைக்காட்சி
ஊட்டுக்கு ஊடு ஓங்குவது ஆங்கிலம்தான்!
சோறென்றாற் தெரியாது சொல்லிடுவார் 'றைஸ்'என்றே
நூறுக்கு 'கன்றெட்டு'ம் 'லெப்ருறைற்' றென்றேதான்
ஏழைபஞ்ச மானிடரும் 'இங்கிலீசு' பேசுகிறார்
கூழைக் குடித்தாலும் கொஞ்சுதமிழ் பேசிநின்ற
காலம்போய் விட்டதம்மா காசுக்கு விலைபோன
கோலத்தார் ஆட்சியிலே கெட்டதடி தமிழ்நாடு!
'ரொமட்டோ'வைக் 'கட்'பண்ணு 'ஒனியனை' 'கட்'டென்றும்
சமையல் பாடத்தைச் 'சன்'காட்சி போட்டதப்பா!
குமட்டை எடுக்கிறதே கோடாம்;பர் நேர்காணல்
குறட்டைபோல் ஆங்கிலமும் கொஞ்சமாய்த் தமிழிருக்கும்!
பிரபாக ரன்னிட்ட பேரீழக் காற்தூசு
கருணாநி தியாட்சியெலாம் காணாது காணாதே!
கல்லக் குடிப்போரில் கழுத்தையே வைத்தவர்கள்
இல்லாத தமிழோடு இடுகின்றார் தொலைக்காட்சி!
ஏழாயி ரத்தாரை ஏன்கொன்றார் என்றமைதிச்
சூழுரைத்து வரவேற்கச் செல்லாத மூக்காவார்
ஈழம் வெடித்தெரிய இவர்மட்டும் தில்லிக்கு
சோழன் குடுமிவைத்துச் சென்றாரே பதவிக்காம்!
குருதிக்கை யானவனைக் கொன்றாடி நிற்பவனை
பருதிப்பொன் னாடையிட்டுப் பக்சருக்குச் சூட்டிவிட்டார்!
முள்ளுமுகா மானகுச்சு முட்டிநிற்கக் காணாமல்
விள்ளும்சா தனைபோலே விமானமொடு வரவேற்றார்!
வேதனையாய்த் தீமூக்கா விளையாடும் காட்சியொடும்
கூதலுக்குத் தீமூட்டும் கொடுக்கரையே கண்டுகொண்டோம்!
ஈழம் எரிந்ததுவும் இலட்சமா யிறந்ததுவும்
பாழாராய் முதல்வர்தான் பார்த்திருந்தார் என்றவடு
நாளை ஈழத்து நாட்சுவடு குறித்திருக்கும்
காலம் இதுவுண்மைக் கணக்கென்றே சொல்லுமடா
இந்தியத்தார் கையில் இரந்துண்ணும் தமிழ்நாடாய்
வந்தவினை தானே வரலாற்றின் வீழ்ச்சியடா!
தான்தலைவர் என்பதற்காய் தமிழீழம் சாகவைத்துப்
பேன்பார்க்கும் இந்தியத்தைப் பொரியாக்கப் பார்த்திருந்த
கருணாநி தியார்க்கும் காலமகள் பழிசுமத்தும்
வரலாறு இனிச்சாகா வந்தபழி வந்ததுதான்!
கழிவான பக்சரொடும் கைகுலுக்கி வருபவரை
அழைத்துவரச் சென்றகதை அறிஞரிடும் செயலாமோ?
பொன்மனத்துச் செம்மலவன் பூரித்துத் தம்பியொடும்
நின்றுபடை சமைத்த நீதியென்றும் சாகாதே!
பிரபாக ரனைத்தான் பெருங்கோடி கொட்டிவைத்து
இரையாகச் சொன்னாரே இரசீவுப் பிரதமராம்!
அரனாக நின்றானே அவன்தானே எம்ஜீயார்
பிரபாவின் உளம்மெதுவோ? பேசென்றான் செம்மலடா!
ஈழம்சா வாயிலிலே எரிந்தெரிந்து மாய்ந்துவிழ
ஆழவலி வேதனையில் ஆருயிரைத் தமிழகத்து
முத்துக்கு மார்முதலாய் மூட்டித்தீ உயிர்கொடுத்தும்
பத்தோடு நான்காகிப் பாசத்தைக் காட்டிநின்றார்!
தொப்புளிலே உறவுற்ற தேசம்தான் வெந்தெரியக்
கொப்பொடிந்து வீழ்வதுபோல் கொட்டியது தமிழகமே!
வைக்கோவும் நெடுமாறன் வரலாற்றில் சீமானும்
பக்கம்ரா மதாசோடும் பாண்டியனும் செயலலிதா
திரையுலகக் கோமான்கள் திரண்டாரே! தமிழீழ
உரைகொடுத்து நின்றழுதும் இந்தியத்துத் தில்லியிலே
ஏதும்சாத் தமிழருக்காய் இம்மிதனும் மாறாமல்
தீதுவைத்துச் சிங்களத்துத் தீக்கையை வளர்த்தனரே!
உணர்வாளர் எல்லோரும், உழக்குமா விந்தியத்தை
சுணையில்லாத் தமிழகத்துச் சென்னையர சாட்சியினை
பழிசெய்த காட்சியெலாம் பகுத்துஉரை கொண்டெழுதி
சுழியினிலே தமிழீழம் துடித்தகதை சொல்லுகிறார்!
என்னினிய தமிழகமே! இதயமிடும் பொன்நாடே!
அன்னைமடி ஆனவரே! அச்சமில்லை நாமெழுவோம்!
என்னரும் தமிழகத்தீர்!
அறுசீர் விருத்தம்
என்னரும் தமிழ கத்தீர்
எரிந்துளீர் ஈழத் திற்காய்!
அன்னைதன் முலைப்பால் தந்த
ஆருடற் தொப்புட் பந்தம்
சொன்னதும் நீர்தான்! பற்றுத்
தெளித்ததும் நீர்தான்! உங்கள்
இன்னுளம் போலே சென்னை
இராசர்கள் இருந்தா ரில்லை!
முத்துகுமார் இளைஞன், சென்னை
முதல்வராம் மூக்கா நெஞ்சில்
செத்திடும் தமிழர்க் காகச்
செய்திடார் எதுவும் என்றே
குத்திய பதைப்பி னாலே
கொழுத்தினான் உடலம் தன்னை!
சத்திலே புழுவாய்க் குத்தும்
தருக்கரைக் காட்டி நின்றான்!
பதின்மூன்று இளைஞர் தீயில்
பற்றியே எரிந்த பின்னும்
சதியொடு சோனி யாளின்
சருகிடும் ஈழ மண்ணின்
விதியொடு வசனம் செய்த
விளையாட்டு என்ன என்போம்?
கதிரையை எண்ணி நிற்போர்
காணரே தமிழன் சாவை!
அரைமணித் துளியே போதும்
அன்னைமண் தெரியும் ஈழம்
இரையெடுத் தழித்தே நிற்கும்
இராசபக் சர்க்கே கந்தச்
சரையொடும் சரிதம் வைத்த
சகுனியாம் சோனி யாளின்
புரையொடும் தமிழ கத்தின்
பித்தர்கள் ஏன்தான் நின்றார்!
எரியவே ஈழம் தன்னை
இந்தியம் விடலா கும்மோ?
கருணாநி தியம்கள் கையில்
கட்டளை இருந்தும் என்ன?
தருணமே பார்த்து ஈழம்
தாரையாய்ச் சிதறிச் சாக
குருடராய் நின்ற மூக்காக்
குலத்தையே மறக்க லாமோ?
இன்றைக்கு என்ன கண்டார்?
ஏந்திளை பகைவர் கையில்
வன்பறிப் பிடவே கண்டோம்!
வாலையர் இளைஞர் சாகக்
கொன்றுளார்! படங்கள் எல்லாம்
குவலயம் சுற்றி வந்தும்
ஒன்றுமே சொல்லார் லங்கா
ஊத்தைக்கே உரைஞ்சு கின்றார்!
அகிலத்தே தமிழர் நின்ற
அணிநாடு எல்லாம் கையில்
முகிலையே நிறுத்தம் செய்ய
முடிந்தவன் பிரபா தானே!
மகிமையாய்த் தமிழன் ஒன்றாய்
வையமெல் லாமும் நிற்க
வகுத்தவன் இவனே! தம்பி
வரலாறே தலைவன் ஆகும்!
துகிலுரி மகிந்த னுக்குத்
தூயபொன் னாடை யிட்ட
பகிடியைத் தலைவன் என்று
பகலவோ? கரிகா லன்னே
அகிலெனத் தமிழன் என்ற
அணிபெறும் தலைவன் ஆகி
வகிடொடும் பிரபா நின்றான்!
வரலாற்றில் இவனே மன்னன்!
மொரீசியஸ் ஆப்பி ரிக்கா
மலேசியா சிங்கப் பூரும்
பிரீதியாய்த் தமிழர் நெஞ்சப்
பெருமிறை ஆன சூர்யன்
சரீரியாய்த் துருவும் பிம்பம்
சந்ததி மைந்தர் கையில்
பரீதியாய் இருக்கு மென்றால்
பிரபனே தலைவன் ஆவான்!
பொன்மன இராமச் சந்தன்
பொறித்தனன் ஈழ மன்றை
அன்றைய அவன்நாள் தன்னில்
ஆறுகோ டியற்றி வைத்து
மன்னவன் பிரபா கையில்
வகுத்தனன் ஈழத் தாரின்
தென்னவத் தலைவன் கண்டோம்!
திரும்பவோர் தமிழன் உண்டோ?
எம்ஜீயார் சொன்னால் ஈழ
எழுச்சியான் பிரபா ஏற்பான்!
தும்பியாய் விழுவான்! என்றே
துடித்தனன் இரச்சீவ் தானே!
அம்பியை அழைத்தான் சந்ரன்!
ஆக்குவுன் எண்ணம் போலே
தம்பியே என்றான்! மண்ணைத்
தரித்தவன் சாய்வான் தானோ?
என்னரும் தமிழ கத்தீர்
இயற்றுவீர் தமிழர் பூமி!
மன்னவன் இராச ராசன்
மானவர் சேர சோழர்
முன்னவர் பாண்டி யர்கள்
வள்ளுவர், கம்பர் அவ்வை
கன்னலாய்த் தமிழாள் நின்ற
காலத்தை எழுது வீரே!
ஈழமே நாடு பெற்றால்
இனியதோர் தமிழ கத்தோர்
ஆழமே பெறுவார் என்ற
அரிச்சலால் மலையா ளத்துப்
பூழைசார் மாந்த ரர்க்குப்
பெருமதிக் காரர் ஆக்கி
வாழவே போரைத் தாங்கி
வந்தநம் மினத்தைக் கொன்றார்!
தந்திரம் செய்து ஈழத்
தனையரைக் கொல்லத் தீக்சிற்
மந்திரம் போட்ட அற்றை
மடக்கையை உடைத்தோம்! ஈழச்
சந்ததி துடைத்த ழிக்கச்
சந்தித்த படையை வென்றோம்!
மந்திகள் பலநா டுற்ற
மழித்தலாற் றானே செத்தோம்!
அமைதிக்குப் படையாய் எம்மை
அழித்தவர், ஈழ முற்றும்
சுமையிட வந்து மண்ணின்
சுருதியை அழித்தார்! வஞ்சத்
தமையெலாம் ஆக்கி வைத்துத்
தந்திர மாகக் கொன்றார்!
இமையொடும் நிற்கும் காதை
ஈழவர் மறப்பர் தாமோ?
தமிழக மக்கள் ஈழத்
தனையரை மதித்தார்! மண்ணின்
கமழ்நிலப் பரணி தன்னில்
காதலே கொண்டார்! சில்லோர்
உமியெனப் பதராய் நின்ற
ஊத்தையாற் றானே ஈழம்
அமிலமாய் எரிய நின்றும்
அசிங்கத்தை எழுதி விட்டார்!
தங்கமே தமிழே ஆக
தந்தவர் பூமி எல்லாம்
அங்கமாய்த் தமிழாய் நின்ற
அறிஞரே! கவிதை யார்க்கும்
உங்களில் ஒருவர் ஆகி
ஈழமண் இதயத் தார்கள்
சங்கமே செய்வார்! வெற்றிச்
சரித்திரம் எழுது வாரே!
வெண்பா!
முத்துகுமார் தீயில் முடித்த பெருங்காதை
கொத்தாய்த் தமிழினத்தைக் கூட்டியதே-நித்திரையார்
மந்தக் கருணர்க்கு மாவீழத் தீவைப்பைச்
சிந்திக்க வைத்தானே செப்பு!
பிற்குறிப்பு:
எம்ஜீயார்-பொன்மனச் செம்மல் எம்.ஜீ.இராமச்சந்திரன்
தீக்சிற்-ரசீவு காலம் இலங்கையில் இருந்த இந்தியத் தூதுவர்
கரிகாலன், சூர்யன்,தம்பி-உலகத் தமிழர் தலைவன் பிரபா
மூக்கா-மு.கருணாநிதி
பதிவு:16-11-2009
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ஈழகாவியம் (16)
- ஈழம் (43)
- உலைக்களம் (14)
- பிரபாகரன் அந்தாதி (18)
- மாவீரர் நாள் (2)
0 comments:
Post a Comment