Sunday, March 17, 2019

பிரபாகரன் அந்தாதி - 12

0 comments


தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (111)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (112)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (113)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (114)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (115)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.

ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (116)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (117)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.

சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (118)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (119)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (120)
- அகரம் அமுதா

0 comments:

Post a Comment