Monday, February 21, 2011

ஒரு புலி வீரனின் கவித் தீ..

0 comments
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghx9j5ThichYL1Cm9x4CAd2RPkDrDq7s8DN6jUNfGX54hPKwbi6WGAqh1OMJJP2Pw3reXxGA3J8qI5lPvkO1ad59K4UMBLKcsZO7YDm9H31a2vrab5z1fuOd1tX5Ighm7e5PlrFwZZyu2d/s1600/kavitee.jpg
உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்…..

பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்
பார்வதியானாளா..?
ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை
அழித்தெழுதிய ஆற்றல் வீரன்
பிரபாகரனைப் பெற்றதால்
பார்போற்ற நின்றாளா..?

வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா
தியாகத்தை எழுதிய புலிகள்
பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்
புகழ்பெற நின்றாளா… ?

அன்று..

தாயிறந்த செய்தி கேட்டு
துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே
துடிதுடித்து ஓடிவந்தார்
தாய் படுத்த சுடலைக்கு..

நீ பெற்ற பிள்ளை..

மானமுள்ள தமிழனுக்கெல்லாம்
நீயே தாயென்று போற்றி..
இன்று
உன் பிள்ளைகள் உலக முழுதும்
உன் சவக்கட்டில் ஏந்தி
ஊர்வலமாய் போகக் கண்டான்
போய் வா தாயே..

தன்மானம் குலையா தலைமகன்
வேலுப்பிள்ளையுடன்
ஈழத் தமிழினத்துக்காய்
சிறை கிடந்த சீமாட்டி நீ..

நேற்று…

நீ உயிருடன் இருந்தாய்
உன் மகனைத்தேடி
உன் வீடு தட்டியது சிங்கள இராணுவம் !

இன்று…

உயிரிழந்து கிடக்கின்றாய்
உன் மகன் வருவானென்று
ஊர் முழுதும் தேடுகிறது சிங்கள இராணுவம்..!

நீ வாழ்ந்த வீட்டின்
மண்ணெடுத்து வணங்குவான்
இதயமுள்ள தென்னிலங்கை சிங்களன்..!

மகிந்தவுக்கு கம்பளம் விரிக்கும்
மன்மோகனின் இந்தியாவோ
நீ வந்தால் விமான நிலையத்தையே மூடும்.. !
தமிழ் வீரன் எங்கள் கருணாநிதி
நானில்லை ஜெயலலிதா என்று
கோடியாலுக்குள் ஓடி – உன்
விமானம் திரும்பிப் பறந்துவிட்டதாவென
ஓரக்கண்ணால் பார்ப்பார்…!

தள்ளாத வயதென்றாலும்
தன் நினைவிழந்து போனாலும்
உனக்கஞ்சும்
இந்திய மேலாண்மை..

நீ வாழ்ந்த வீடு கிடந்தால்
அங்கும் புலியொன்று பிறக்குமென்று
இடித்துத் தகர்த்தார் இழிஞர்..

தாயே..
ஏனென்று கேட்கிறாயா… ?

நிலத்தின் அடியில் கிடந்தாலும்..
மன்னர் முடியில் கிடந்தாலும்..
வைரம் வைரம்தான்..
நீ எங்கு கிடந்தாலும்
நீ… நீதான்…!
உனக்கிணையுண்டோ உலகில்..!

அம்மா உன் பயணம் ஆரம்பித்துவிட்டது..
அழிந்துபோன சங்கத்தமிழை
ஆக்கித்தந்த அரும்பெரும் பெருமாட்டி
போய் வா..!

ஊறணிச் சுடலையில் உன் தலையில்
சுள்ளென ஒரு நெருப்புச் சுடும்…
நீ மட்டும்
மறந்துவிடாதே…
நீ மட்டும்…
ஒரேயொரு நொடி திரும்பிப்பார்…
உன் மகன்
தன் கடன் முடித்திருப்பான்..

உனக்காக ஒரு சிலை ஊரில் எழும்..!
ஒரு முறை
அதை வந்து பார்…!

முந்தித்தவமிருந்து
முந்நூறு நாள் சுமந்து
அந்தி பகலாய் ஆதரித்த
எங்கள் அம்மா..
போய்வா…!

முன்னையிட்ட தீ முப்புரத்திலே..
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே..
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே..
நானுமிட்ட தீ
மூழ்க மூழ்கவே..

எங்கள் அம்மா – இது
அஞ்சலிப்பா அல்ல
ஒரு
புலி வீரனின்
கவித் தீ.. !

உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்.

அலைகள்

Sunday, February 20, 2011

என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

0 comments
எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட
உலகந் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க - எமக்கு
ஒற்றைத் தலைவனை காலங் - கணித்துப் பெற்றவளே ;

சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி
நிராகரித்த வஞ்சகத்தார் - சுவாசித்த சிறு மூச்சும்
வேண்டாமென விட்டவளே ;

உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க
இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க
போறாத காலம்பூண்டு - பக்கவாதம் தின்றுத் தீர்க்க
சிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;

கட்டிய கணவன் மடியில் தாங்க
பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க
உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய்
உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ?????

கொல்லிவைக்க நாங்களிருக்கோம்
சந்தனத்தால் சேர்த்து எரிப்போம்
தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே
எல்லாம் செய்வோம் - இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா????

கட்சி புகழ் வாசனை ஆச்சி
நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சி
உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் – வெள்ளைச்சட்டையே பெருசாச்சி

வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்;


ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும் –

உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!!

-----------
வித்யாசாகர்

வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?

0 comments
அன்னையே தாயே
அழியா புகழ் கொண்ட அற்புதமே!
ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்
ஈட்டி கொண்டு
எழுத வைத்த ஈகைத்தாயே.

வீரத்தின் விளை நிலமே
விண்ணையும் விஞ்சிய
வீரனை விடுதலைக்கு
ஈன்றெடுத்த வேங்கைத்தாயே,

பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை
பார் போற்ற பிறப்பெடுத்து
பாலூட்டி வளர்த்த பார்வதியே!

பொக்கிஷமே புண்ணியமே
காலத்தால் அழியாத காவலனாம்
சூரியனை பெற்றெடுத்த
கண்ணகியே,, சொர்ணத்தாயே,,,

நீரையும் நெருப்பையும் நிழலாக்கி
நிமிர்ந்து நின்ற நாயகியே,

சோலை விருட்சம் அம்மா-நீ
சொந்தம் நாங்கள்
துயரம் கண்டாயோ-எம்
நெஞ்சு கனக்க
நிலையகன்று சென்றனையோ,

காற்றானாய்
உன் கண்மணிகள்
கண்ணில் நீரை இறைத்து நின்றோம்-நீ
பாலூட்டி வளர்த்த
எம் தலைவன் பரிதவிப்பான்-அதை
மறந்தாயோ?,

நேற்றோடு இன்று நாள் நகரும்-உன்
நினைவுகள்
என்றும் சங்கமிக்கும்,


கனகதரன்,

Sunday, February 13, 2011

ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் தியாகச்சுடர் முருகதாசன்

0 comments
ராஜதந்திரமுச்சந்தியில் அவன்
தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக
எதுவும் நடந்துவிடவில்லை.
எரிந்து கருகிய அவனின் உடல்
கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு
உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது.

தாய்நிலம் மீதான தணியாத தாகமும்
பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன்
பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில்
நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய்
ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர்.

$புதுமாத்தளன் கடந்து இனஅழிப்பு
தொடர்கையில் எரிந்தபடி முருகதாசன்
‘நிறுத்தவேண்டும் உலகம் இதை’ என்றான்.
ஒருகால் முறிந்த கதிரை மட்டுமே அவனின்
சுயதகனம் பார்த்து விக்கித்துநின்றது.- மற்றப்படி
அவனின் எரிந்த உடல்கடந்தே எல்லோரும்
தம்தம் அலுவல்களுக்காய் பறந்தனர்.- எல்லோருக்கும்
உலக நாகரீகம் மீட்பதிலும்
கரைஒதுங்கும் மீன்இனம் காப்பதிலும்
அன்டார்ட்டிக்காவில் பனிகரைவதிலும்
ஈரானின் அணுஉலையை மூடும் மும்முரத்திலுமெ
நேரம் ஓடியது.-முருகதாசன் உடல்கருகி
ஓரத்தில் கிடந்தான்.

எம்மைத்தவிர வேறு எவரையுமே அந்த
இளைஞனின் ஆகுதி உலுக்கியதாய்
தெரியவில்லை.-இன்றும் கூட..!
நாமும் என்ன செய்தோம்.-கூடினோம்.
ஆர்ப்பரித்தோம்.திரண்டோம்.

ஓன்றுகூடி அவன் உடலை எரித்து இப்போ
ஓன்றும் நடவாதது போலவே நடக்கிறோம்.
என் தந்தை தாய்..உன் சகோதரர் உற்றார் என
அனைவருக்குமாக எரிந்தவன் முருகதாசன்.
ஏதொஒரு அலுவலகத்தில் எஞ்சியநாட்களை
வேலைசெய்து குடும்பம்குட்டி என
வுhழ்ந்துவிட்டுப்போயிருக்கலாம் அவனும்.

ஆயினும் உலகத்துஊர் கூடிநின்று எம்
தாய்நிலம் எரித்து எம் தேசத்து ப10க்களை
தணலாக்கி வெறியாட்டம் போட்ட
பொழுதினில் தன் உடல்கொழுத்தி அதனுள்
உலகத்து மனச்சாட்சியை உலுக்கமுயன்றவன்.

ஆனந்தபுரத்திலிருந்தும் அடுத்த முனையில்
சாளையிலிருந்தும் இன்னொரு தலப்பில்
இரணைப்பாலையில் இருந்தும்
நந்திக்கடலிருந்தும் மெதுமெதுவாய்
ஒருகூட்டுப்படுகொலைக்கு உலகம் தயாரான
பொழுதினில் அதைத்தடுக்க கடிதம் எழுதி
வைத்துவிட்டு உடல்கருகிப்போன ஒருவனை
எந்தநாதியும் ஏன்என்று திரும்பிப்பார்க்கவில்லை.

ஆனாலும் நாம் அப்படியே விட்டுவிட்டு
அடுத்தவேலைக்காக பறக்கமுடியாது.
எங்களுக்காய் எரிந்தவனுக்கு என்னென்று
நன்றி நினைவுகூர்வோம்.-அவனின் உடல்எரிந்த
சாம்பலை ஊதிவிட்டு அடுத்தவருடம் அவன்
நினைவுவரும்வரைக்கும் ஓய்திருக்கபோகிறோமா??
அந்த இளைஞனின் நினைவை எம்
நெஞ்சுள் பதிவோம்.-எம் அடுத்த
தலைமுறைக்கும் சொல்லிவைப்போம்.

முருகதாசன்
உன்னை எழுதவும் பாடவும் எமக்கிருக்கும்
வார்த்தைகளில் எதுவுமேயில்லை.
உன்னை வணங்குகிறோம்.-நீ
எரிந்தபொழுதினில் எம்நெஞ்சில்பட்ட
சுடுதழும்பை ஆறவிடாமல் வன்மம் வளர்ப்போம்.
காலம் எவ்வளவு கடந்தாலும் அனலாடிய உன்
ஆன்மத்தை அதனிலும் உயர்ந்த உன் ஈகத்தை
எம்முள் நிரந்தரமாய் படிந்துவிட்ட காயத்தை
எதையுமே நாம் மறவோம்.
நீ நினைத்த விடுதலையை நாளைப்பொழுது
மீட்டுவரும்.நம்பிக்கையோடு இரு.

ச.ச.முத்து