Sunday, March 17, 2019

எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை

0 comments


சுவடுகள் பதியுமொரு பாதை… 21- பூங்குழலி வீரன் –
நவம்பர் 27. தமிழீழத்தின் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போரில்வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைத்துப் போற்றும் நாளாக அந்நாள் விளங்குகிறது. அன்றைய தினத்தில் மலேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழக்கம்போல் நானும் பங்கெடுத்திருந்தேன்.
“மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! என்ற மாவீரர் நாள் பாடல் என்னை வந்தடைந்திருந்த போது இப்பாடலை எழுதிய புதுவை இரத்தினதுரை என் நினைவுகளுக்குள் வந்திருந்தார்.
புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். கவிஞர், சிற்பக்கலைஞர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுத்துறையில் முக்கியபங்காற்றியவர் என எண்ணற்ற துறைகளில் ஆளுமை நிறைந்தவர்.
வானம் சிவக்கிறது, ஒரு சோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள், உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் போன்றவற்றை இவரது படைப்பிலக்கியங்களாக நாம் கவனத்தில் கொள்ளலாம்.
“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டுபாய், இருமல்மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க் கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டுவிட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாததுயரெது?
ஊரிழந்து போதல்தான்.”
இந்த கவிதையை வாசிக்கின்ற போது மிக அண்மையில் படித்த ஓர் ஆப்பிரிக்க அகதியின் கவிதை நினைவுக்கு வருகிறது. அந்த கவிதை இப்படியான ஒரு காட்சிப்படுத்தலோடு இருக்கிறது. “புலம்பெயர்ந்து நாங்கள்இங்கு சிந்தியிருக்கிறோம் ஆப்பிரிக்க நினைவுகளுடன். ஆனாலும் வாய்திறந்து ஒரு பாடல் கூட பாட முடியவில்லை. கடலென வழிகிறது கண்ணீர். நினைவுகள் முழுக்க தாய்நாடும் போற்றி வாழ்ந்த வீடுமாக மட்டுமேஇருக்கிறது.ஒரு பாடல் கூட பாட முடியாத இந்த நாட்டை விட்டு ஓடி வந்துதன் தாய்நாட்டிடம் சரணடைந்து விடவேண்டும்” என்பதாக முடிகிறது அந்த கவிதை.
புலம்பெயர்தலும் ஊரிழத்தலும் உயிரை இழப்பதற்கு சமமானதாகவே மனிதன் உணர்கிறான் அவன் யாராக இருந்தாலும் சரி. வாழ்ந்த இடத்திலிருந்து வேலை விடயமாகவோ அல்லது பிற காரணங்களுக்கு வேறொரு இடத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருக்கும்போதே எப்போது வீடு திரும்புவோம் என மனதை அரிக்கும் அந்த உணர்வுக்கே நம்மால் பதில் சொல்ல முடியாத பொழுது ஊரிழத்தலையும் புலம்பெயர்தலையும் எப்படி கற்பனைக்குள் கொண்டு வர முடியும்?
நடைப்பிணமாக மட்டுமேவாழ்கிறேன் என எப்போதும் சொல்வார் என் ஈழத்து நண்பரொருவர். எப்போது தொடர்பெடுத்தாலும் ஈழத்தைப் பற்றி மட்டுமே பேசுவார் ஒழிய தான் இப்போது இருக்கிற எழில்மிகு ஐரோப்பிய நாடு குறித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். நானாக கேட்டாலும் கூட அதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதாகவே இருக்கும் அவரது பதில். பலவேளைகளில் எங்கு நமது வேர் பரப்பப்பட்டிருக்கிறதோ அதை நோக்கிதான் நமது உயிரும் மனதும் அலைந்துகொண்டிருக்கிறது சாகும் வரை.
சும்மா காற்றில்பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே.
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண்தின்னிகள் மரணிக்கும்.
அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடந்து, நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்ட இன்றுவரை நடந்து கொண்டிருப்தாகவே அறியப்படும் தமிழீழத் தனியரசுக்கான போர் அவ்வளவு எளிதாக தொடங்கிவிடவில்லை. அது ஒரு விபத்தாகவும் நிகழ்ந்துவிடவும் இல்லை. மிகுந்த அவதானத்துடன் திட்டமிட்டு அப்போராட்டம் தொடங்கப்பட்டது.தொடங்கப்பட்ட வேகத்துடனே முடிந்து போன எத்தனையோ போராட்டங்கள் இருக்கின்றன. ஈழப்போர் அப்படியன்று. அதன் ஒவ்வொரு படிநிலைகளிலும் எண்ணற்ற உயிர்கள் விதைக்கப்பட்டு அதன் இருப்பு ஆலமரமாய் இருந்த காலம் ஒன்று இருந்தது. அதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடவோ மறுத்துவிடவோ முடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை – எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ் வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது… கூடவே கூடாது.
ஈழத்தின் துயரத்தையும் அதை நோக்கிய தனது அக்கறையாகவே தனது பெரும்பாலான கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. ஒரு நாடு போரால் அவதியுறுகிற பொழுது போரில் ஈடுபடுகிற, ஈடுபாடு காட்டாத இரு தரப்பினரும் சேர்ந்தே துன்பங்களை துயரங்களை அனுபவிக்கின்றனர். வாழ்ந்து பழகிய முற்றம், நெருங்கிய உறவுகள், நண்பர்கள், இன்னபிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், கொடுமைகள், ஊர் ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் என அதிரவைக்கும் பதிவுகளோடுதான் ஈழத்தமிழனின் வாழ்வு…
கால நதிக்கரையில் கால் நனைத்தவாறு
நீள நடக்கின்றேன்.
கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன
கவிதைகளாக.
நாளாந்தமான புதிய விதிகளின்பிறப்பில்
என் கவிதைகளிலும் வேண்டியன நிலைக்க
வேண்டியன அழிந்தும்போக
எஞ்சியவற்றில் வாழ்வேன் நான்.
ஈழப்போரின் கடைசி அத்தியாயத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடந்ததாக நம்பப்படும் புதுவை இரத்தினதுரை என்ன ஆனார் என இன்றுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் எஞ்சி நிற்கும் அவரது கவிதைகள் அவரை அடையாளப்படுத்தியடியே இருக்கின்றன.

0 comments:

Post a Comment