Sunday, October 3, 2010

ஈழகாவியம் - 06

0 comments

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:08 நிகழ்காலம்.
பிரித்தானியாவால் அழிந்த ஈழம்!
(அகவல்)

பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே
நரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது!
சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கை
மதத்த நாடாய் மறுகணம் வந்தது!
பரத்தையர் கொடுத்துப் படுக்க வைத்துக்
கரத்தைக் கட்டிலில் கைப்பிடித் ததனால்
ஆளுனர் சோல்பரி அசிங்கர் கையில்
வாளைக் கொடுத்து வரலா றழித்தார்!
சோல்பரிக் குழுவில் செப்பிய பொன்னரின்
சால்புநீ தியையும் சரித்திடக் கெடுத்தார்!
பின்னர் ஒருமுறை பித்தர் சோல்பரி
மன்னன் சங்கிலி வாழ்ந்த பூமியாம்
யாழ்ப்பா ணத்தில் யாத்திரை வந்தவர்
ஆழ்ந்துரை செய்த இளைஞன் ஜீஜீப்
பேருரை கண்டு பிடித்தகா ரணத்தால்
வாரறி வாளனை வரச்சொலிக் கண்டார்!
சோல்பரி செய்த சூத்தையால் செத்து
கால்விழுந் திட்ட கனித்தமிழ் நிலத்தின்
களமும் சரிதமும் கனத்ததிவ் வேளை
முளையில் எம்மவர் விட்ட தவறினால்
புலிகள் பிறந்தார்! பேயாய் அழிக்கும்
நிலையில் சிங்களம் நிலைத்தகா ரணத்தால்
ஆயுதம் கைக்குள் அடங்கப் பெற்றார்!
சாயுதல் செய்யாச் சரித்திரம் ஆக்கினர்!
ஆயினும் எங்கள் அடுக்களை முன்னே
பாயினைப் போட்டுப் படுத்தான் இந்தியன்!
இந்திய வல்லமை இல்லா அரசால்
கந்தகம் கொடுத்துக் கனத்தசிங் களத்தில்
பாகியும் சீனமும் பட்டறை வைத்துச்
சாகிடச் செய்த சரித்திரம் கண்டோம்!
சுதந்திரம் பெற்ற சமநே ரத்தில்
மிதந்தது இந்திய விடியலும் காணீர்!
பசுவைக் கும்பிடும் பாரதத் தோடு
பசுவைச் சாப்பிடும் பாகியர் சேரார்!
என்றவர் ஜின்னா இன்றுபா கிஸ்தான்
வென்றுதன் நாட்டை விரிந்த இந்தியத்
தன்னொடும் பிரிந்து தனியர சொன்றை
மின்னிட வைத்த வேளையிற் றானும்
சங்கிலி, வன்னி, சார்புசால் எல்ல(h)ளன்
பொங்கிய நிலத்தைப் பிரித்துமே வையாச்
சங்கதி தன்னால் சார்தமிழ் நிலத்தைச்
சிங்களம் இன்று தின்னுதல் கண்டோம்!
நீதியும் நேர்மையும் நெஞ்சுரம் இன்றியும்
பாதியில் நின்ற பண்பறி வாளரால்
சாதித் தமிழன் சரிந்தனன்! வெள்ளையர்
கோதி விட்டுக் குளிர்காய்ந் ததினால்
அய்ம்பதும் கூடவும் அரணோய்ச் சியதோர்
எம்பதி இழந்தோம்! இன்று இந்தியம்
வல்லர சின்றி வாழ்தலாற் சீனமும்
எல்லாப் பக்கமும் எங்களைச் சூழ்ந்தான்!
தன்னை உடைத்த தாழ்வாய் இந்தியம்
சென்னையைக் கூடச் சேவகம் ஆக்கிச்
சன்னதம் ஆடும்! சளக்கர், சிங்களம்
கொன்று ஐநூறாய்க் கொடுத்த போதுமே
இன்னும் இந்தியம் இந்த மக்களை
தன்நாட் டவராய்ச் சனியர் மதித்திலார்!
புன்னர சிவரால் புலிகள் தேசமும்
நச்சுக் குண்டில் நசுங்கித் தீய்ந்து
பிய்ச்சுக் குதறப் பொடியாய் ஆனது!
கொலைகொலை எங்கும் கூட்டி அள்ள
வலைபல விட்ட மகிந்த அரசால்
வாழ்ந்த நிலங்களை வழித்துத் துடைக்கச்
சீழ்பிடித் தவனாய்ச் செத்தான் தமிழன்!
இந்தவோர் நிலையில் எம்மினம் வெந்த
சந்தியில் நின்று சரித்திரம் எழுதத்
தந்ததே காலம் தமிழன் விதிதான்
வந்ததே! ஆயினும் வந்திடும் எம்நாள்!
கானப் படுகுயில் கடும்புயற் குள்ளும்
வானம் கீற வருங்குரல் கேட்கும்!
நானும் அதுவே! நடந்த நிலத்தைத்
தேனும் பாலும் சொரிந்த மண்ணைத்
தீயர் கொழுத்தித் தீய்த்த போதிலும்
தாயர் தந்த தமிழீ ழத்தைப்
பாடிட வந்தேன்! பகைக்களம் தன்னில்
வாடிட நின்றேன்! மலிந்த கண்ணீர்க்
கடலினிற் குளித்தே கணினியிற் கரைந்தேன்!
எட்டபன் குட்டிக் கிழந்த தேசத்தை
நட்டபின் மீழ்வோம் நாளெலாம் கவலைத்
தொட்டிலை விடுவோம் தொல்பொருள் ஆக்கிக்
கெட்டவர் கொட்டம் கெட்டிட மீள்வமே!


பிரித்தனே எங்கள் குரல் கேட்கிறதா?
(அறுசீர் விருத்தம்)


சிங்களம் பறித்தெடுத்த
செந்தமிழ் நிலத்தை எல்லாம்
எங்குமே நடவா திந்த
இனப்படு கொலையை எல்லாம்
அங்கதர் ஆக வந்து
அழித்தவர் குதத்தை எல்லாம்
மங்கலாய்த் தானும் நீயோ
மனத்திலேன் கொள்ள வில்லை!


பிரிந்தர சாண்ட மன்னர்
பேணிய நிலத்துக் காப்பை
பரந்திடும் கருணை இல்லாப்
பாதகர்க் கிரையே யாக்கி
நிரந்தர மிடவா வெள்ளைப்
பிரித்தனே இன்னும் உள்ளாய்?
கறந்தபால் முலைக்கே றாதே!
கறையிது உனக்குத் தானே!


சாலையை மறித்த எங்கள்
சாதியின் துயரை எல்லாம்
ஆலையாய்ப் பிழிந்த துன்பம்
அடுக்கிய தேம்ஸ்சின் ஓரம்
காலையும் மாலை யோடும்
கரைகடந் திடித்து நின்றும்
சூலையைத் தீர்க்க வின்னும்
சிலிர்ததிட வில்லை நீதான்!


போரொடும் நின்று எம்மைப்
பிடித்திட்ட பேயை, மண்ணைக்
கூரொடும் தீய்க்க வந்து
கொழுத்திய சிங்க ளத்தை
யாரொடும் உரைப்போம்? நீதான்
யாப்பிலே எம்மை விட்டு
நீரோடும் எழுதி விட்டே
நீந்தினாய் சாகின் றோமே!


சூரியன் மறையா நாடாய்ச்
சிறந்தநீ தமிழன் கொற்றம்
பாரிய அரசம் செய்த
பண்பைநீ மறந்த போதே!
ஆரியச் சிங்கத் தோடு
அசிங்கமாய் மனிதன் சேர்ந்து
வாரிசாய் விஜயன் வந்த!
வம்சத்தில் அழிந்து விட்டோம்!


விஜயனின் வம்சம்! இந்த
விரிகதை மகா வம்சம்!
புஜபல வெல்லா ளனின்
பெரும்படைத் தளப திக்குக்
கஜமுசா செய்ய வென்றே
காரிகைத் தாயை வைத்தே
வசமிடச் செய்தார்! எல்லான்
மன்னவன் போரிற் செத்தான்!


மதுவிடச் செய்வர், பற்றி
மாதுவைச் சாய வைப்பர்!
கதுவிட யார்க்கும் கையில்
காசெனத் தெறிவர், தூதுக்
குதவியே வருவோர்க் கெல்லாம்
கொடுப்பரே இரத்தி னத்தைப்
பதவியில் பண்டா ரிக்குப்
படைத்ததை அறியாய் நீயோ?


கண்டியிற் கூட்டிச் சென்று
கதைத்தபான் கீமூன் னாரும்
உண்டியில் குளிரைக் கண்டு
உரைத்தனர் ஆயின் பின்னர்
நொண்டியாய் பத்தே நாழி
நெடுமுகாம் வந்து விட்டுச்
சுண்டமுன் பறந்தார்! எல்லாம்
சிங்களச் சதியே காண்பாய்!


ஆனந்தக் குமார சாமி
அருணாச லக்கோன் தம்பி
வானபொன் இராம நாதன்
வல்லவர் செல்வா, பொன்னர்
மானவர் உரைத்த பின்னும்
வரலாற்றில் தவறு செய்தாய்?
ஏனது அரசி நாடே
எங்களைச் சாக விட்டாய்?



கல்வியிற் றமிழர் பெற்ற
கடாட்சமும் அறிவாய்! உன்றன்
சொல்லொடு நின்ற காலம்
செந்தமிழ் இனத்தார் தம்மின்
வல்லமை கண்டாய்! இந்த
வடிவிடும் தமிழர் நுட்பம்
கொல்லவே இளைஞர் சாகக்
கொழுத்துதே அரக்கம் காணாய்!


இலட்சமாய்த் தமிழர் வந்து
இனத்தொடும் நின்றார்! கல்விப்
பலத்தொடும் வந்தார்! பண்புப்
படைப்பின ராகக் கொண்டார்!
மலத்தவர் சிங்க ராட்சி
மரணமாய் ஈழம் செய்ய
புலத்தவர் நெஞ்சம் தூங்கச்
செல்லுமா? பிரிட்டன் நாடே!


ஒவ்வொரு வெள்ளி தானும்
இனமொடும் கூடு கின்றார்!
செவ்வியே தருகின் றாரே!
செத்திடும் தமிழன் முள்ளுக்
கவ்விய கம்பிக் குள்ளே
கசக்கிடும் சிங்க ராட்சி
எவ்விதம் சாக டிப்பார்
என்பதைச் சொன்னார் தானே!


சனநாய கத்தை வையப்
பாரம்ப ரியத்தை ஈர்த்துத்
தனநாடாய் மானி டத்துச்
சார்ந்துமே நிற்பா யுன்முன்
இனமொடும் சூழ்ந்தோம்! சாவின்
இழப்பிலே துடிக்கச் சொன்னோம்!
கனத்தவுன் இதயம் வென்றால்
காண்போம்நாம் மீட்சி அன்றோ!


தேம்ஸ்நதிக் கரையி னோரம்
சுதந்திரச் சிலையாள் கண்டோம்!
யாம்படச் சுதந்தி ரத்தின்
யாப்பினை இழந்தோம் காண்மின்!
கூம்பிய துயரைச் செப்பச்
தேசத்தின் குரலோன் பாலா
ஓம்பிய சரித்தி ரத்தை
உன்செவி மறந்தா போச்சு?


ஊடகத் தூய்மை கண்டோம்!
இளைஞரைச் சுட்டுத் தள்ளும்
கேடகர் இலங்க ராட்சிக்
கிளர்படை வன்மம் காட்டித்
தேடலில் 'சனல்போர்' கண்டோம்!
திகைத்தது வையம் தானே!
நாடகத் திலங்கா தன்னை
நல்லவர் மதிப்பார் தானோ?



சனநாய கத்தை நீதிச்
சுதந்திர அமைப்பை வையம்
கனமது கொள்ளக் காட்சி
கண்டிடும் ராணி நாடே!
இனப்படு கொலையை மண்ணை
இழுத்துமே பறித்தெ டுக்கும்
வனத்தவர் செயலைப் பார்த்து
வாய்கட்டி நிற்க லாமோ?


என்னரும் தமிழா கேளாய்!
எருக்கலைச் சாதி வந்து
புன்னலத் தோடு மாற்றுப்
புழுதியிற் படிந்து கெட்டு
தன்னலத் தோடு வாழும்
தறுதலை யாரும் கண்டோம்!
அன்னியக் கையில் நக்கும்
அடிமையை இங்கும் கண்டோம்!


நரிச்செயல் செய்தே எம்மை
நாறிட வைப்பார்! இந்தக்
கரிக்குண மாந்தர் எல்லாம்
காசிலே விலைபோ வார்கள்!
பிரித்தானி யத்து வெங்கள்
பெற்றவள் தேசத் துள்ளீர்
உரித்தொடும் ஈழ மன்றின்
உண்மையீர் ஒன்றாய் நிற்பீர்!


சிங்களம் கொடுத்த காசில்
சிக்குண்டோர் உலகின் மன்றில்
பங்கமே செய்கின் றார்கள்!
பலதுறை ஊடக கங்கள்
எங்களின் வணிகர் காசில்
இடுகின்றார்! எதிரிக் காகச்
சங்கதி இயற்று கின்றார்!
சரிதமே பொறிக்கும் ஓர்நாள்!


பொங்கிடும் தமிழே என்று
பூத்தனர் இலட்சம் மக்கள்!
அங்குவத் தலைவன் சுட்ட
அகிலமே அசையும் பக்கம்!
இங்கொடும் சில்லோர் வந்து
எத்தனை உதிர்த்தும் என்ன?
சங்கமாய் நின்ற வேங்கைச்
சரித்திரம் எவன்தான் செய்வான்?


அஞ்சுபேர் கூடிப் போனால்
ஆயிரம் பேரைத் தானும்
இஞ்சையெட் டப்பம் கூட்ட
இயலுமா? மறவர் பூமி
நெஞ்சிலே சுமந்து நிற்கும்
நேயரே இலட்ச மாவார்!
கஞ்சலர் அந்நிச் சோற்றைக்
கண்டவன் தமிழன் ஆகான்!


செத்தது செத்தோம்! வேங்கைச்
சிரசொடும் நின்ற நாட்டை
யுத்தமா மலைகள் வந்து
உடைத்தனர்! மெய்தான்! மக்கள்
செத்தனர்! கொள்ளை யாகத்
தீய்ந்தனர்! சிங்க ராட்சி
எத்தனை ஆண்டென் றாலும்
எம்கொலை விடுமா சொல்வீர்!


வீரமாய் நின்ற மண்ணை
விழுத்தினர் தீயர் ஆட்சி
ஆரமாய் நின்ற மண்ணை
அழித்தனர் கொலைவான் ஏவி
சூரராய் நின்று பின்னர்
செல்லரித் தவராய் மாறிப்
பாரமாய்ப் போன மண்ணின்
பழியரைச் சொல்லில் வைப்பீர்!





விற்பது தமிழர் கையில்
விளம்பரம் தமிழர் பையில்
நிற்பது எதிரிக் காக
நிழல்களும் குலைக்கு தப்பா!
புற்றொடும் பாம்புக் கால்கள்
பேய்விடும் வீம்புப் பார்வை
அற்பரின் எழுத்து எல்லாம்
அசிங்கமே தொடவே வேண்டாம்!


என்தமிழ் இனத்தின் மேலோர்
இலட்சமாய் வாழும் நாட்டில்
இன்றொரு சரிதம் செய்வீர்
இழந்ததைப் பெறவே வேண்டில்
நன்றெனப் புலத்தில் ஒன்றாய்
நாடுகள் கடந்த நாடு
இன்றிடச் செய்வீர்! எங்கள்
ஈழமே உலகை வெல்லும்!



வெண்பா!


ஊடகங்கள் வர்த்தகரை ஊர்ந்து பணமியற்றி
நாடகமாய் எத்தனுக்கே நாவிசைப்பார்-கேடவர்கள்
நின்று நிலமெரிக்கும் நீசருக்கே தொட்டிலிட்டுக்
கொன்றோர்க்கே மாலையிட்டார் கொள்!


1-ஜீ..ஜீ: ஜீ.ஜீ.பொன்னம்பலம்
2-சனல்போர்:சனல்-4 தொலைக்காட்சி
3-எல்லான்: எல்லாளன்

பதிவு:10-11-2009

-புதியபாரதி

0 comments:

Post a Comment