Saturday, August 28, 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05

0 comments

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)



உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

தாவு –தப்பு, குற்றம்.

எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (43)

கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (44)

மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (45)

மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை.

தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (46)

மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (47)

நிணம் –கொழுப்பு.

தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (48)

பண்டு –பழமை; மறு –குற்றம்.

புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (49)

புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற;
கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்; துருப்பு –படை.

எண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்
கண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்
தேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்
வாடிக் கலங்கலைநீ என்று! (50)

நண்ணுநர் -நண்பர்


--
அன்புடன்
அகரம்.அமுதா

0 comments:

Post a Comment

Blog Archive