Sunday, February 20, 2011

என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

0 comments
எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட
உலகந் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க - எமக்கு
ஒற்றைத் தலைவனை காலங் - கணித்துப் பெற்றவளே ;

சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி
நிராகரித்த வஞ்சகத்தார் - சுவாசித்த சிறு மூச்சும்
வேண்டாமென விட்டவளே ;

உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க
இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க
போறாத காலம்பூண்டு - பக்கவாதம் தின்றுத் தீர்க்க
சிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;

கட்டிய கணவன் மடியில் தாங்க
பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க
உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய்
உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ?????

கொல்லிவைக்க நாங்களிருக்கோம்
சந்தனத்தால் சேர்த்து எரிப்போம்
தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே
எல்லாம் செய்வோம் - இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா????

கட்சி புகழ் வாசனை ஆச்சி
நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சி
உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் – வெள்ளைச்சட்டையே பெருசாச்சி

வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்;


ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும் –

உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!!

-----------
வித்யாசாகர்

0 comments:

Post a Comment