Popular Posts
Monday, February 21, 2011
ஒரு புலி வீரனின் கவித் தீ..
at
12:50 PM
Posted by
எல்லாளன்
0
comments
உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்…..
பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்
பார்வதியானாளா..?
ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை
அழித்தெழுதிய ஆற்றல் வீரன்
பிரபாகரனைப் பெற்றதால்
பார்போற்ற நின்றாளா..?
வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா
தியாகத்தை எழுதிய புலிகள்
பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்
புகழ்பெற நின்றாளா… ?
அன்று..
தாயிறந்த செய்தி கேட்டு
துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே
துடிதுடித்து ஓடிவந்தார்
தாய் படுத்த சுடலைக்கு..
நீ பெற்ற பிள்ளை..
மானமுள்ள தமிழனுக்கெல்லாம்
நீயே தாயென்று போற்றி..
இன்று
உன் பிள்ளைகள் உலக முழுதும்
உன் சவக்கட்டில் ஏந்தி
ஊர்வலமாய் போகக் கண்டான்
போய் வா தாயே..
தன்மானம் குலையா தலைமகன்
வேலுப்பிள்ளையுடன்
ஈழத் தமிழினத்துக்காய்
சிறை கிடந்த சீமாட்டி நீ..
நேற்று…
நீ உயிருடன் இருந்தாய்
உன் மகனைத்தேடி
உன் வீடு தட்டியது சிங்கள இராணுவம் !
இன்று…
உயிரிழந்து கிடக்கின்றாய்
உன் மகன் வருவானென்று
ஊர் முழுதும் தேடுகிறது சிங்கள இராணுவம்..!
நீ வாழ்ந்த வீட்டின்
மண்ணெடுத்து வணங்குவான்
இதயமுள்ள தென்னிலங்கை சிங்களன்..!
மகிந்தவுக்கு கம்பளம் விரிக்கும்
மன்மோகனின் இந்தியாவோ
நீ வந்தால் விமான நிலையத்தையே மூடும்.. !
தமிழ் வீரன் எங்கள் கருணாநிதி
நானில்லை ஜெயலலிதா என்று
கோடியாலுக்குள் ஓடி – உன்
விமானம் திரும்பிப் பறந்துவிட்டதாவென
ஓரக்கண்ணால் பார்ப்பார்…!
தள்ளாத வயதென்றாலும்
தன் நினைவிழந்து போனாலும்
உனக்கஞ்சும்
இந்திய மேலாண்மை..
நீ வாழ்ந்த வீடு கிடந்தால்
அங்கும் புலியொன்று பிறக்குமென்று
இடித்துத் தகர்த்தார் இழிஞர்..
தாயே..
ஏனென்று கேட்கிறாயா… ?
நிலத்தின் அடியில் கிடந்தாலும்..
மன்னர் முடியில் கிடந்தாலும்..
வைரம் வைரம்தான்..
நீ எங்கு கிடந்தாலும்
நீ… நீதான்…!
உனக்கிணையுண்டோ உலகில்..!
அம்மா உன் பயணம் ஆரம்பித்துவிட்டது..
அழிந்துபோன சங்கத்தமிழை
ஆக்கித்தந்த அரும்பெரும் பெருமாட்டி
போய் வா..!
ஊறணிச் சுடலையில் உன் தலையில்
சுள்ளென ஒரு நெருப்புச் சுடும்…
நீ மட்டும்
மறந்துவிடாதே…
நீ மட்டும்…
ஒரேயொரு நொடி திரும்பிப்பார்…
உன் மகன்
தன் கடன் முடித்திருப்பான்..
உனக்காக ஒரு சிலை ஊரில் எழும்..!
ஒரு முறை
அதை வந்து பார்…!
முந்தித்தவமிருந்து
முந்நூறு நாள் சுமந்து
அந்தி பகலாய் ஆதரித்த
எங்கள் அம்மா..
போய்வா…!
முன்னையிட்ட தீ முப்புரத்திலே..
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே..
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே..
நானுமிட்ட தீ
மூழ்க மூழ்கவே..
எங்கள் அம்மா – இது
அஞ்சலிப்பா அல்ல
ஒரு
புலி வீரனின்
கவித் தீ.. !
உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்.
அலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ஈழகாவியம் (16)
- ஈழம் (43)
- உலைக்களம் (14)
- பிரபாகரன் அந்தாதி (18)
- மாவீரர் நாள் (2)
0 comments:
Post a Comment