Tuesday, November 23, 2010

தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!

0 comments


சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற்
செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே
நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின்
நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ நீர்வான்
காற்றென்றும் ஐம்பூத வடிவம் தாங்கிக்
காலப்போர் புரிந்ததமிழ் மறவர் தேவே!
மாற்றில்லாப் பசும்பொன்னாய் மிளிரும் ஈழ
மக்கள்தம் மன்னவனே வாழி! வாழி!!

பூவெல்லாம் நின்மாண்பு சொல்லுமா போல்
புதுவிதழ்கள் மிகவிரித்து எழிலாய் நிற்கும்!
நாவெல்லாம் நின்னாற்றல் பேசிப் பேசி
நயன்சொல்லும்! நம்கவிஞர்; யாக்கும் இன்பப்
பாவெல்லாம் பைந்தமிழர் தலைவ நின்னை
பல்லூழி வாழ்கவெனும் தமிழீழத்துக்
காவெல்லாம் உறைவிலங்கு புட்கள் யாவும்
கரிகாலன் பேரிற்பல் லாண்டு பாடும்!

குட்டுகின்ற போதெல்லாம் குனிந்து கூப்பிக்
கும்பிட்ட நிலைமாற்றி வைத்தோய் வாழி!
வெட்டுக்கு வெட்டென்று பதில்கொ டுத்த
வேங்கைமா மன்னவனே வாழி! வாழி!!
இட்டசிறு பிச்சையினை இருகை நீட்டி
இரந்துண்டு வாழந்திட்ட இனத்தில் வந்த
மொட்டவிழ்ந்து மணம்வீசும் மலர்போல் நெஞசின்
மாதலைவ மண்ணினிலே நீடு வாழி!

செந்தமிழர் ஆயிரமாம் ஆண்டு செய்த
செழுந்தவத்தின் பெரும்பயனாய் வாய்த்தாய் வாழி!
வந்திறங்கி வானிருந்து வளம்பெ ருக்கும்
வண்டமிழர் கங்கைநதி போல்வாய் வாழி!
மந்தையிலை மறத்தமிழர் நாமென் றீன
மாற்றர்க்குப் பெரும்பாடம் சொன்னாய் வாழி!
அந்தமில்சீர் தமிழீழ அணியார் நாட்டின்
சூரியனே நீவாழி! தமிழும் வாழி!!

0 comments:

Post a Comment